;
Athirady Tamil News

கேரளாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விலை குறைப்பு..!!

0

நாடு முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவிலும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்த பாட்டில் குடிநீர் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு விலையாக உள்ளது.

மேலும் குடிநீர் பாட்டிலின் விலையும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. சராசரியாக ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.20-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். எனவே பாட்டில் குடிநீரின் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கேரள அரசுக்கு கோரிக்கைகள் சென்றது.

இதைத்தொடர்ந்து குடிநீர் பாட்டிலின் விலையை குறைக்க கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக குடிநீர் பாட்டில்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுடன் கேரள உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி திலோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலையை ரூ.13 ஆக குறைக்க வேண்டும் என்று மந்திரி கேட்டுக் கொண்டார். ஆனால் உற்பத்தி செலவு காரணமாக ரூ.13 என்பது தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்பதால் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலையை ரூ.15 ஆக நிர்ணயம் செய்ய தனியார் குடிநீர் பாட்டில் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

மேலும் குடிநீர் பாட்டிலை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் கேரள அரசு கொண்டுவந்தது. அதன்படி இனி கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தனியார் குடிநீர் பாட்டில்களும் இந்த விலையில் தான் விற்க வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்திய தரச்சான்று நிறுவனம் அங்கீகரித்த குடிநீர் பாட்டில்களை மட்டும்தான் விற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தனியார் குடிநீர் பாட்டில் தயாரிப்பாளர்கள் கூறி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − one =

*