;
Athirady Tamil News

கறுப்பாடுகளின் முகத்திரையை நாம் மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டும்!!

0

´´அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று (14.02.2020) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ஆட்சி மாறினாலும் பதவியில் இருந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை இடைநிறுத்தாது, புதிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிறந்த அரசியல் கலாச்சார பண்பு மேற்குலக நாடுகளில் இருக்கின்றது. ஆனால், எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை.

சிறப்பான திட்டங்கள் கூட அரசியல் பழிவாங்கலுக்காக தடுத்து நிறுத்தப்படுகின்றன.

புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த போவதாக மார்தட்டிவிட்டு அரியணையேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி – மக்கள் நலன்சார் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக மத்திய மாகாணத்திலிருந்து உதவி ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியை உரிய வகையில் பெறுவதற்கு கால அவகாசமொன்று வழங்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மத்திய மாகாண ஆளுநர் ஊடாக நியமனக் கடிதங்களை வழங்குவதற்கும் நிகழ்வு ஏற்பாடாகி இருந்த நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தமக்கு எப்போது நியமனம் கிடைக்கும் என ஆசியர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பில் ஆளுங்கட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் அமைச்சர்கள் கதைப்பதில்லை.ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டால் மலையகத்துக்கு விடிவு பிறந்துவிடும் என்ற கோதாவில் இருக்கின்றனர்.

சலுகை அரசியலே அவர்களின் கொள்கையாக இருப்பதை கடந்த மூன்று மாதங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய இரண்டும் சமாந்தரமாக முன்னெடுக்கப் படவேண்டும். கடந்த காலங்களில் நாம் இதனை செய்வோம்.

ஆனால் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சலுகை அரசியலை நடத்தவே முயற்சிக்கின்றனர். இந்த மீளா வட்ட முறைக்குள் இருந்து அவர்கள் விடுபட்டு – தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

அதேவேளை, நிஜமான மக்கள் பிரதிநிதியாக நாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து கண்டி மாவட்டத்துக்கு பல வழிகளிலும் சேவைகளை வழங்கி வருகின்றோம்.

ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் இங்கு வரும் ´பரசூட்´ வேட்பாளர்கள், வார்த்தை ஜாலங்கள் மூலம் எமது மக்களை திசை திருப்பும் அரசியல் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றனர். இப்படியான கறுப்பாடுகளை மக்கள் இம்முறை முன்கூட்டியே இனங்கண்டுவிட்டனர்.

எனவே, அந்த கறுப்பாடுகளின் முகத்திரையை நாம் மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டும். அதேபோல் எனது மனசாட்சியின் பிரகாரம், பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எமது மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளேன். அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலுக்கும் கண்டியில் உயிர்கொடுத்துள்ளேன்.

ஆக 42 மாதங்களில் நாம் செய்தவை ஏராளம். அவற்றை மக்களிடம் எடுத்து கூறுஙகள். உண்மையை சொல்லி நேர்வழியில் வாக்குகேட்டு வெற்றியின் சிகரம் தொடுவோம். ” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*