;
Athirady Tamil News

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

0

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு சர்வமத தலைவர்களால் கௌரவிப்பு!

பாக்கிஸ்தானில் நடைபெற்ற கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை பிரதிபலித்து கலந்துகொண்டு பதக்கங்களை வெற்றி கொண்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீரர்களுக்கு இன்று (16) வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில், ஆலயத்தின் தலைமை போதகர் பி.என் சேகர் தலைமையில் நடைபெற்ற வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசிகள் வழங்கியிருந்தனர்.

கடந்த மாதம் 22-01-2020 பாக்கிஸ்தானில் நடைபெற்ற கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து இலங்கை தாய் நாட்டிற்காக விளையாடி பதக்கங்களை வெற்றிகொண்ட எஸ்.சஞ்சயன், பி.ராகுல், கெ.கண்னண், ஆர்.கெ.கெவின், வி.வசிகரன், ரி.நாகராஜா மற்றும் எஸ். சிறிதர்சன் ஆகியோர் மாலை அணிவித்து கேடயங்கள் வழங்கி சர்வமத தலைவர்களால் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் கடந்த 06-02-2020 ஆம் திகதி கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் பத்து நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச கிக் பொக்சிங் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்களை சுவீகரித்த ஆர்.கெ. நிம்றொத் (08) மற்றும் ஆர்.கெ. ஜெய்றுஸ் (06) ஆகிய சகோதரர்களும் மதத் தலைவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வில் குறித்த வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய வடக்கு மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளரும்,ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாருக்கு தலைமை போதகர் பி.என்.சேகரினால் கேடயம் வழங்கப்பட்டு சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, முவஅட்ட கம ஆனந்த தேரர், இன மத நல்லிணக்கத்திற்கு இவ்வாறான நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகிறது. இனி வரும் காலங்களில் சர்வமத தலைவர்களால் இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வில், பங்குத்தந்தை அருட்திரு ஆர்.ஜோன் செல்வம், எம்.மவ்ரூப் மௌலவி, ஆர்.முருகேஸ்வர குருக்கள், வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆலயத்தின் விசுவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 16 =

*