;
Athirady Tamil News

வன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை துரிதமாக சீராக்கம் செய்து வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள் திருப்திகரமாக உள்ளபோதும் அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்தாக ஐயத்தை ஏற்படுத்தும் குறிப்புகளுக்கு முழுமையான விளக்கத்தை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி தம்பு மங்களேஸ்வரன், பல்கலைக்கழக பதிவாளர் வி. காண்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் வவுனியா வளாக மூத்த கல்வியாளர்களால் தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக மூதவை, பேரவை என்பவற்றின் ஒப்புதலுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வன்னிப் பல்கலைக்கழகமாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீம் நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் புதிதாக வந்த அரசின் கீழ் அனைத்து விடயங்களும் மீளாய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் திருப்திகரமாக உள்ள போதும் சில ஐயங்களை ஏற்படுத்தும் குறிப்புகளுக்கு முழுமையான விளக்கத்தை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இன்றைய கூட்டத்தில் கேட்கப்பட்டது.

அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கான பணிகள் இடம்பெறுவதால் இந்த சீராக்கத்தை துரிதமாக வழங்கவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

முன்மொழிவுகளில் சீராக்கம் செய்யப்படும் போதும் வளாக மூத்த கல்வியாளர்கள், பல்கலைக்கழக மூதவை, பேரவையின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்பதால் ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி தம்பு மங்களேஸ்வரன் உறுதியளித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − one =

*