;
Athirady Tamil News

அங்கவீனங்கள் சம உரிமை பார்வையிலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும்!!

0

பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார (SRH) சேவைகளைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் மிகவும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களில் உள்ளனர். சுகாதார சேவைகள் பௌதீக ரீதியாக அணுகப்படும் போது கூட, மாற்றுத்திறனாளிகளான பெண்கள் மற்றும் இளைஞர்கள் போதுமான பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகளை அணுகுவதில் நிதி, சமூக மற்றும் உளவியல் ரீதியான தடைகளை எதிர்நோக்கலாம்.

இருப்பினும் சாதாரண நபர்களுடன் ஒப்பிடுகையில் மாற்றுத்திறனாளிகளின் அதிகரித்த பாதிப்படையக்கூடிய தன்மையின் காரணமாக அவர்களுக்கு விரிவான பாலியல் கல்வி மற்றும் கவனிப்பு பெரியளவில் தேவைப்படுகின்றது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பிறப்பு குறைபாடுகள் மற்றும் அங்கவீனங்கள் குறித்த ஒன்பதாவது சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) மருத்துவம் மற்றும் சமூகவியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இன்று ஒரு குழுக் கலந்துரையாடலுக்கு ஒன்றிணைகின்றது.

மேற்படி குழு கலந்துரையாடல் “மனித உரிமைகள் மற்றும் சம உரிமைகள் பார்வையிலிருந்து பிறப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தல்” என்ற தலைப்பில் பிறப்பு குறைபாடுகள் மற்றும் அங்கவீனங்களை மனித உரிமை மற்றும் பாலின சமத்துவ கோணத்தில் ஆராய்கின்றது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி ரிட்சு நக்கென் வரவேற்புரை வழங்கும் போது “ஒரு பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 15% ஆன மக்கள் ஒரு வகையான குறைபாட்டை அனுபவிக்கின்றனர்” என குறிப்பிட்டார்.

இவர்களுக்கு உதவுவதற்கு, நிலையான அபிவிருத்தி இலக்கு இல 10 சமத்துவமின்மையை குறைப்பதை வலியுறுத்துகிறது. இது மாற்றுத்திறனாளிகள் சேவைகளை பெற்றுக் கொள்வதில் சமமான அணுகல் இருப்பதையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கின்றது. ஐ.நா.வுக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் எவரையும் பின்தங்க விடாமலிருப்தே எங்கள் முக்கிய குறிக்கோளாகும்.

மே 2008 இல், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததுடன் இலங்கை 2016 இல் இவ் உடன்படிக்கையை அங்கீகரித்தது. இதுவே மாற்றுத்திறனாளிகளின் மீதான சர்வதேசத்தின் சட்டப்பூர்வமான முதலாவது கரிசனைப் பிணைப்பாகும். இது விசேடமாக மாற்றுத்திறனாளிகள் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகளை அணுகுவதற்கான உரிமைகளை பற்றி குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் உடல் ரீதியான இயலாமைகள், களங்கம் மற்றும் பாகுபாடு உள்ளிட்ட பல காரணங்கள் இந்த சேவைகளை அவர்கள் பெரும்பாலும் அணுக முடியாதாக்குகின்றன. சமூக, சட்ட, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைப் பிரிவால் வழங்கப்படுகின்ற கொள்கை, திட்டமிடல் மற்றும் சேவை செயற்பாடுகளில் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் சுபாங்கி சுட்டிக் காட்டுகையில், “இந்தத் தடைகள் சமூகம் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகள் மற்றும் அலட்சியப் போக்குகளால் ஏற்பட்டதே தவிர, மாற்றுத்திறனாளிகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல. மாற்றுத்திறனாளிகளை ஒரு பொதுக் குழுவாக பொதுமைப்படுத்த முடியாது, ஏனெனில் ஒரே வகையான தீர்வு அனைவருக்கும் பொருத்தப்பாடாக அமையாது. அவர்களின் தேவைகள் பல்வகைமைப்பட்டது. உதாரணமாக புத்திக்கூர்மை குறைபாடு உள்ளவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுகிறார்கள் ஏனெனில் பெரும்பாலான சேவைகள் உடலியல் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களையே மையப்படுத்துகின்றது”.

பிறப்பு குறைபாடுகள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கு சமமான இனவிருத்தி சுகாதார சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அதுல களுராச்சி விவாதித்தார்.

“மாற்றுத்திறனாளிகள் சாதாரண நபர்களைப் போல இல்லற வாழ்வில் ஈடுபடவும் அத்துடன் அவர்கள் விருப்பப்பட்டால் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் முடியும். குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கர்ப்பகால பராமரிப்பு போன்ற விடயங்களில் அவர்கள் சமமான அணுகலைக் கொண்டிருக்க வேண்டும். இனவிருத்தி சுகாதார திட்டங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தும்போது சேவை வழங்குநர்கள் பிறப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மீதான தங்கள் பொறுப்புகளை மனதில் வைத்திருப்பது கட்டாயமாகும்”.

இந்தக் குழுவில் டாக்டர் ஷியாமணி ஹெட்டியாராச்சியும் (சிரேஷ்ட விரிவுரையாளர் மாற்றுத்திறனியல் துறை, மருத்துவப் பீடம், களனி பல்கலைக்கழகம்) உள்ளடங்குகின்றார். இந்த குழு ஊனமுற்றோர் உரிமை ஆர்வலரும், Enable Lanka அறக்கட்டளையின் இணை நிறுவனருமான ஜனிதா ருக்மலினால் நிர்வகிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல் கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு திறந்த உரையாடலுக்கான ஒரு தளத்தை வழங்கியது. ஏனெனில் இது சமவுரிமை மற்றும் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் 2030 ஆகியவை தொடர்பாக இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வழி வகைகளை ஆராய்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + twenty =

*