;
Athirady Tamil News

யாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைக் கிளை கணினி மயப்படுத்தப்படாமையே காரணம் என்று பேரவைக் கூட்டத்தில் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்றதன் பின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய பேரவையின் முதலாவது கூட்டத்திலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

புதிய பேரவையின் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் மிக நீண்ட கால தாமதம் ஏற்படுவதனால், பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பேரவை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது இடம்பெற்ற வாதப் பிரதி வாதங்களின் போதே, பரீட்சைக் கிளை கணினி மயப்படுத்தப்படாததனாலேயே உரிய காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது என பீடாதிபதிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை நடந்த காலப்பகுதி, விடைத்தாள்கள் திருத்திக் கையளிக்கப்பட்ட காலப்பகுதி, பெறுபேறுகளை வெளியிட எடுத்த காலப்பகுதி போன்ற விவரங்களைப் பெற்று, இனிவரும் காலங்களில் பரீட்சைப் பெறுபேறுகளை இயலுமான வரை காலதாமதமின்றி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி பேரவைக்கு உறுதியளித்தார்.

இன்றைய அறிமுகக் கூட்டத்துக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனும், புதிதாகப் பெயர் சேர்க்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த கல்வியியலாளர்கள் மூவரும் வருகை தரவில்லை. பேரவை உறுப்பினர்களின் அறிமுகம் இடம்பெற்றதோடு, பல்கலைக்கழக நிலையியற் குழுக்கள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான பேரவை நியமன உறுப்பினர்களின் தெரிவும் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*