கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்- கெஜ்ரிவால்..!!!

குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
கடந்த 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சந்த்பாக், கோகுல்புரி, மவுஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் கலவரம் நீடித்தது. இந்த வன்முறையில் அந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் 42 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது வரை 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 630 பேர் கைதாகி உள்ளனர். மேலும் 200 பேரிடம் விசாரணை நடக்கிறது.
வடகிழக்கு டெல்லி பகுதியில் அமைதி திரும்பினாலும் பொதுமக்களிடம் பதட்டம் நீடித்த வண்ணம் இருக்கிறது. ‘துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்ற கோஷம் நீடித்து வருவது தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்டு வெளியேறிய குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் 2 குழுக்கள் விசாரணை நடத்துகிறது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உண்மை நிலவரத்தை கண்டறிகிறது.
டெல்லியில் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
டெல்லியில் அமைதியையும், சமூக ஒற்றுமையையும் கொண்டு வருவதே எனது முதல் பணியாக இருக்கும். மீண்டும் கலவரம் ஏற்படாது என்ற நம்பிக்கை இருக்கிறது.
போலீசார் தொடர்ந்து வாகனங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமான இடங்களில் கூடுதலான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.