சிரிய போர் : அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… நேட்டோ உதவவில்லை… ஆகையால் ஐரோப்பிய எல்லையை திறந்த துருக்கி…!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.
இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை ரஷியா- சிரிய படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு துருக்கி நடத்திய பதிலடி தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
இதனால் சிரியாவின் ஆதரவு நாடான ரஷியாவுக்கும்-துருக்கிக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்த போர் பதற்றத்தால் சிரியாவின் இட்லிப் பகுதியில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே அகதிகளாக துருக்கி நாட்டிற்குள் நுழைய தொடங்கியுள்ளனர்.
துருக்கியில் ஏற்கனவே சுமார் 35 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். தற்போது நிலவிவரும் போர் பதற்றத்தால் சிரியாவில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக ரஷிய வான்வெளி தாக்குதலில் தங்கள் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அவசரமாக ஆலோசனை நடத்த துருக்கி நேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்தது.
ஐரோப்பாவுக்குள் நுழைய காத்திருக்கும் அகதிகள்
இதையடுத்து நடைபெற்ற நேட்டோ ஆலோசனை கூட்டத்தில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு இரங்கல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட எந்தவித ஆர்வமும் காட்டாத நேட்டோவின் செயல் துருக்கிக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேட்டோவின் செயலால் ஆத்திரமடைந்த துருக்கி தங்கள் நாட்டில் அகதிகளாக உள்ள மக்களை ஐரோப்பிய நாட்டிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்காக துருக்கியையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இடமாக உள்ள துருக்கி-கிரீஸ் எல்லையை திறந்துவைத்துள்ளது. இதனால் சிரிய அகதிகள் மட்டுமல்லாமல் துருக்கியை சேர்ந்த ஆயிரக்காணக்கானவர்களும் கிரீஸ் எல்லை நோக்கி பயணம் செய்துவருகின்றனர்.
துருக்கி-கிரீஸ் எல்லை
ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு எல்லையை முற்றுகையிட்டுள்ள அகதிகளை கிரீஸ் அதிகாரிகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அகதிகளுக்கும் கிரீஸ் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது பல அகதிகள் அத்துமீறி வேலிகளை தாண்டி சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லைக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அகதிகளுக்காக ஐரோப்பிய எல்லை கதவுகளை நாங்கள் மூடுவது இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
சிரிய நாட்டுக்குள் துருக்கி நடத்தும் தாக்குதல்களுக்கு நேட்டோ ஆதரவு தெரிவிக்காவிட்டால் தங்கள் நாட்டில் உள்ள அனைத்து அகதிகளையும் ஐரோப்பாவுக்கு அனுப்பிவிடுவோம் என கடந்த மாதமே எர்டோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.