சந்தேகநபர்களுக்கு மீளவும் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட நால்வரையும் நகைக் கடை உரிமையாளரையும் வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் இருவர் மீது கைக்குண்டை வைத்திருந்தமைக்கு ஆபத்தான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டும் மற்றும் நால்வருக்கும் கொள்ளை, ஆபத்தான ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டமை மற்றும் வீடுடைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அச்சுவேலி பொலிஸார், பி அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
கொள்ளைச் சந்தேகநபர்கள் நால்வரும் அவர்களிடம் நகைகளை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று(01) மாலை முற்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதிவான், வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அச்சிவேலிப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டமை மற்றும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.
கொள்ளையிட்ட சுமார் 16 பவுண் நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர். ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தோர்.
இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3-4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்றிரவு இரவு முற்படுத்தப்பட்டனர். அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் இன்று மாலை மீளவும் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது !! (படங்கள்)
மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!!
“டில்லு குறூப்” வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு சிறை!!