;
Athirady Tamil News

டெல்லி கலவரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 40 பேர் கைது..!!

0

வடகிழக்கு டெல்லியில் கடந்த 23-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் மறுநாள் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

ஜாப்ராபாக், மாஜ்பூர், சந்த்பாக் உள்ளிட்ட வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவிய நிலையில் சில இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. தொடர்ந்து 3 நாட்களாக நடந்த கலவரத்தில் உளவுப்பிரிவு அதிகாரி, போலீஸ் ஏட்டு உள்பட 47 பேர் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் டெல்லி மேற்கு மாவட்டம் கயாலா பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக நேற்று முன்தினம் இரவு வதந்தி பரவியது.

பின்னல் வேகத்தில் பரவிய இந்த வதந்தியால் பொதுமக்களிடையே பீதி நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தினர். இதனால் வதந்தி அடங்கியது.

போலீசார் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் சிலர் வன்முறை குறித்து வதந்தி பரப்பியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பிய 40 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் மேற்கு டெல்லியை சேர்ந்த அபிஷேக் சுக்லா (24) என்பவர் ஒருவராவார். இவரது டுவிட்டர் பக்கத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இதேபோல போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தவறான தகவல்களை கூறியவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது.

இதில் பேசியவர்களில் பெரும்பாலானோர் தவறான தகவல்களை கூறியது தெரிய வந்ததைத் தொடந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*