;
Athirady Tamil News

டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- மத்திய மந்திரி அறிவிப்பு..!!!

0

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது.

இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் 16 இத்தாலி பயணிகள் உள்பட 30 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

முதலில் கேரளாவை சேர்ந்த 3 பேரை இந்த வைரஸ் தாக்கியது. அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இத்தாலியில் இருந்து வந்த பயணிகள் மற்றும் இத்தாலி, துபாய்க்கு சென்று வந்தவர்கள் வழியாக இந்த வைரஸ் பரவியது. டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆக்ரா ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வரை 29 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 57 வயதானவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சமீபத்தில் ஈரான் சென்றுவிட்டு திரும்பி இருந்தார். 30-வது நபராக அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உத்தம்நகரைச் சேர்ந்த அவர் சமீபத்தில் தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்கு சென்று வந்தார். கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 2 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா அறிகுறி உள்ளவர்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் 23 பேருக்கு இந்த வைரசின் பாதிப்பு இருப்பது முதல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு உள்ளனர். புனேயில் உள்ள ஆய்வு மையத்துக்கு 2-வது கட்ட சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவில்தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது தெரிய வரும்.

கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலும் மக்கள் முக கவசத்துடன் வெளியே செல்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது.

அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் விழா ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தி உள்ளது.

அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 3 =

*