அரச நிறுவனங்களை சக்தி மயமாக்கி சிறந்த சேவை மூலம் சிக்கல்களை தவிர்க்க முடிவு!!

அரச நிறுவனங்களில் நண்பர்கள் மற்றும் விரும்பிய ஏனையோருக்கு பதவிகளை வழங்கும் அரசியல் சகாப்தத்தை தம்மால் மாற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களை சக்தி மயப்படுத்தி அவற்றை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிய பலர் இன்று எந்தவித சலுகைகளும் இல்லாமல் தம்முடன் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இன்று (06) ஜனாதிபதியை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை சக்தி மயமாக்கி சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் எழக்கூடிய பல்வேறு சிக்கல்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அனைத்து அரச நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் மூன்றாவது கட்டமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
மக்களுக்கு நிலையான சுதந்திரம் கிடைக்க வேண்டுமாயின் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே அரச ஊழியர்களின் பொறுப்பு என்பதுடன் அதுவே சட்டத்தின் கடமை எனவும் கூறினார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, சிரேஸ்ட ஆலோசகர் லலீத் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.