ஜம்முவில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி..!!

இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறையும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் வைக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் (திட்டம்) ரோகித் பன்சால் கூறியதாவது:-
ஜம்முவில் 2 பேரின் மருத்துவ பரிசோதனைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. டாக்டர்களின் அறிவுரையை மீறி வெளியே சென்ற அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர கொரோனா அறிகுறியுள்ள அவர்களின் உடல் நிலை நிலையாக இருக்கிறது. அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இருவரும் கொரோனா பாதித்த இத்தாலி, தென் கொரியாவுக்கு சென்று வந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளும் மார்ச் 31-ந்தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
மேலும் காஷ்மீரில் அனைத்து வகையான பயோ மெட்ரிக் வருகை பதிவு முறைகளும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.