யெஸ் வங்கி மோசடிக்கு மோடி அரசே காரணம்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கிக்கு உதவுவதற்காக ரூ.2,450 கோடியை அளித்து, அதன் 49 சதவீதம் பங்கை வாங்கிக் கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அரசு ஒப்புதலுடன் முடிவு செய்திருப்பது வினோதமாக இருக்கிறது.
யெஸ் வங்கியில் ஒரே ஆண்டில் 35 சதவீதம் கடன் அதிகரித்திருப்பதை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் போனது எப்படி? இதே கால கட்டத்தில் பிற வங்கிகளில் கடன் வழங்கிய விகிதம் 9 சதவீதம் இருந்தது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி யெஸ் வங்கி அளித்த கடன் தொகையைக் காட்டிலும் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அளிக்கப்பட்ட கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நான் மத்திய நிதி மந்திரியாக இருக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அடுத்த 2 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியில் இருப்பவர்களும் மத்திய அரசில் இருப்பவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை. யார் வேண்டுமானாலும் யெஸ் வங்கியை கையகப்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு புதிதாக கடனை அளிக்க எந்தக்குழு அல்லது யார் ஒப்புதல் வழங்கியது? யெஸ் வங்கி கடனை வாரி வழங்கியதை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு அறிந்திருக்கவில்லையா? ஆண்டு இறுதியில் யெஸ் வங்கி சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி படிக்க வில்லையா?
யெஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகும், அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுனர் நியமிக்கப்பட்ட பிறகும் வங்கிச் செயல்பாடுகளில் எந்தவொரு மாற்றமும் நிகழாதது ஏன்? கடந்த ஆண்டு ஜனவரி -மார்ச் காலாண்டில் முதல் முறையாக நஷ்ட அறிக்கையை யெஸ் வங்கி சமர்ப்பித்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடப்பட்டது ஏன்? இந்தக்கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் மத்திய அரசில் இருப்பவர்களும் யெஸ் வங்கி நிதி நெருக்கடியை மறைத்து விடலாம் என்று பல வகையில் முயற்சி செய்கின்றனர்.