கொரோனா வைரஸ் தாக்கிய என்ஜினீயரின் உறவினர்கள் உள்பட 27 பேர் கண்காணிப்பு..!!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்து 600 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தது. இருப்பினும் கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் இதுவரை 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டது.
விமான நிலையங்களில் கூடுதல் டாக்டர்களும், சுகாதாரத்துறையினரும் பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதுபோன்று தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயர் ஒருவரை கொரோனா நோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அந்த என்ஜினீயர் கடந்த 28-ந்தேதி சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சென்றார். அதன்பிறகு சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் நோயின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
கடந்த 1-ந்தேதி காஞ்சிபுரம் என்ஜினீயர் கால்டாக்சியில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகளை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவ பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்தனர்.
இந்த பரிசோதனையில் காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் புனேயில் உள்ள உயர்ஆய்வகத்துக்கும் ரத்த மாதிரிகளை ஸ்டான்லி டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கும் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர் உடனடியாக என்ஜினீயரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனிவார்டில் அனுமதித்தனர்.
4-ந்தேதியில் இருந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் என்ஜினீயருக்கு வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் என்ஜினீயர் சொந்தமாக புது வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதனை பார்ப்பதற்காகவே மஸ்கட்டில் இருந்து அவர் வந்துள்ளார்.
சில நாட்கள் தனது உறவினர்களுடன் அவர் இருந்துள்ளார். வீட்டுவேலை நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு கட்டிட பணியாளர்களிடமும் கலந்து பேசியுள்ளார். இதன்பிறகு தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் காஞ்சிபுரம் வந்த போது யார்-யாருடன் நெருக்கமாக பழகினார் என்பதை கண்டறிந்து அனைவரையும் சுகாதாரத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கொரரோனா பாதிப்புக்குள்ளான என்ஜினீயரின் உறவினர்கள், கட்டிட வேலை செய்தவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்டான்லிக்கு அவரை அழைத்து வந்த கார் டிரைவர், காஞ்சிபுரம் மற்றும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் என மொத்தம் 27 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும் தொடர் மருத்துவபரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கும் என்ஜினீயர் மூலமாக கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன் முடிவுகள் வந்த பிறகே 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். இதற்காக சுகாதாரத்துறையினர் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் அந்நோய் தொடர்பாக அச்சம் நிலவுகிறது. பலர் தாங்களாகவே முன்வந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு தொடர்பாக டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அனைத்து வசதிகளும் தமிழக அரசிடம் இருக்கிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.