கார் மோதியதில் முதியவர் பலி – போலீசுக்கு பயந்து பிணத்துடன் 4 நாள் சுற்றிய வாலிபர்..!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே உள்ளது பன்னியங்கரை. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புதரில்காயத்துடன் முதியவர் உடல் கிடந்தது. போலீசார் விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று அப்பகுதியில் சுற்றியுள்ளது தெரியவந்தது.
இந்த காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போலீசார் கார் உரிமையாளர் கர்நாடக மாநிலம் ஆனக்கல் ஹள்ளியை சேர்ந்த சங்கமித்ரா (37). என்பவர் என தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஆலத்தூர் டி.எஸ்.பி. தேவசியா கூறியதவாது:-
கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அருகே நாயிக்கன்ஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (67). இவர் கடந்த 4-ந் தேதி திம்மசாந்திரா என்ற பகுதியில் நடந்து சென்ற போது சங்கமித்ர ஓட்டி வந்த கார் மோதி காயம் அடைந்துள்ளார். அப்பகுதி மக்கள் சங்கமித்ராவின் காரிலேயே வெங்டேசப்பாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த சங்கமித்ரா போலீசில் சிக்காமல் இருக்க உடலை அவரது உறவினர்களிடம் தராமல் காரில் வைத்துக் கொண்டு 4 நாட்களாக ஊர் ஊராக சுற்றியுள்ளார்.
கடைசியாக கடந்த 8-ந்தேதி கார் விபத்து நடந்த இடத்திலிந்து 600 கி.மீ தொலைவில் உள்ள கேரள மாநிலம் வடக்கஞ்சேரி அருகே வெங்கடேசப்பாவின் உடைலை வீசி சென்றுள்ளார்.
இவ்வாறு டி.எஸ்.பி. தேவசியா கூறினார். இதனையடுத்து சங்கமித்ராவை போலீசார் கைது செய்து ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.