;
Athirady Tamil News

இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா நோயால் 47 பேர் பாதிப்பு..!!

0

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

நேற்று வரை இந்த வைரசுக்கு இந்தியாவில் 44 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அறிகுறி காணப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. அரியானாவில் 14 பேர், உத்தரபிரதேசம், கேரளாவில் தலா 9 பேர், டெல்லியில் 4 பேர், ராஜஸ்தான், மராட்டியம், லடாக் யூனியன் பிரதேசத்தில் தலா 2 பேர், தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவர் என 47 பேர் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த 47 பேரின் உறவினர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் சந்தேகப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை 12 மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 3,200 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 47 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பி பயப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு, மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து மாநில அரசுகள் சார்பில் கூடுதல் ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் தற்போது 52 கொரோனா வைரஸ் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 57 இடங்களில் ஆய்வகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் இந்த ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், மதுரை அருகே உள்ள தோப்பூர், திருச்சி, கோவை புறநகர் பகுதிகளிலும் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனி வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான மையங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு சென்று வந்துள்ளனர். இதனால் அந்த மாநிலங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநில அரசு தனது எல்லைகளை ஏற்கனவே சீல் வைத்துள்ளது.

அதேபோன்று மிசோரம் மாநில அரசும் தனது எல்லைகளை சீல் வைத்துள்ளது. அந்த மாநிலம் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு மியான்மர் எல்லையில் உள்ளது. அதே போன்று 318 கி.மீ வங்கதேச எல்லையும் உள்ளது. இந்த இரண்டு எல்லைகளை மிசோரம் மாநில அரசு மூடுவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவாகி பரவ ஆரம்பித்த பிறகு அடுத்த நாளே இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு வந்துள்ள சுமார் 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இத்தாலியில் இருந்து வந்திருப்பவர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து இத்தாலியை சேர்ந்த 14 சுற்றுலா பயணிகள் அரியானாவில் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த 14 பேரும் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை சில மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. கர்நாடகா மாநில அரசு சிறுவர்களுக்கான பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆரம்ப பள்ளிகளில் தேர்வுகளை உடனடியாக முடித்து விட்டு விடுமுறை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

டெல்லியில் பஸ்கள் அனைத்தையும் தினமும் சுத்தப்படுத்தி மருந்து தெளிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 5 பேர் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் முன்பு அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளனர்.

ஷாப்பிங் மால், பஜார், கடை வீதிகள் என மக்கள் கூடும் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால், 5 பேரை தாக்கிய கொரோனா அவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் நூகு, பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். முதல் கட்டமாக பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அனைத்திற்கும் ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இத்தேர்வுகளை எழுத வரும் மாணவ- மாணவிகளில் நோய் அறிகுறி இருப்போருக்கு தனி தேர்வறை ஏற்படுத்திக் கொடுக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நோய் பாதிப்பு இருப்போர் தேர்வு எழுத வேண்டாம் என்றும், அவர்களுக்கு தனியாக இன்னொரு நாள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகளை இப்போதைக்கு நடத்த வேண்டாம், அவற்றை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கவும் கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோல பத்தனம் திட்டா மாவட்டத்திற்குட்பட்ட ஆலயங்கள், கோவில்கள், மசூதிகளில் வழிபாடு நடத்த பெருமளவில் மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளா முழுவதும் 1,116 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 149 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ள 12 மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 12 மாநிலங்களிலும் டெல்லியில் இருந்து சென்றுள்ள மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள்.

மேலும் இந்த 12 மாநிலங்களிலும் முக கவசங்கள், கையுறைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிக அளவு இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 3 =

*