;
Athirady Tamil News

கொரோனா பீதி- விருந்து நிகழ்ச்சிகளை தள்ளிவைக்க கலெக்டர் வேண்டுகோள்..!!!

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருச்சூர் மருத்துவ மாணவிக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து திருச்சூர், கோழிக்கோடு மாணவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது தெரிய வந்தது.

3 பேரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். அவர்கள் வீடு திரும்பிய ஓரிரு நாளில் இத்தாலியில் இருந்து கேரளா வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் அவர்களின் மகன் என 3 பேருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் அவர்களின் உறவினர்கள் 2 பேருக்கும் பரவியது. அவர்கள் 5 பேரும் பத்தனம் திட்டா மற்றும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபோல இத்தாலியில் இருந்து கேரளா வந்த கண்ணூரைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தையும், அவரது பெற்றோரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தையையும் சேர்த்து கேரளாவில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 5 பேர் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் முன்பு அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளனர்.

ஷாப்பிங் மால், பஜார், கடை வீதிகள் என மக்கள் கூடும் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால், 5 பேரை தாக்கிய கொரோனா அவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் நூகு, பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். முதல் கட்டமாக பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அனைத்திற்கும் ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இத்தேர்வுகளை எழுத வரும் மாணவ-மாணவிகளில் நோய் அறிகுறி இருப்போருக்கு தனி தேர்வறை ஏற்படுத்திக் கொடுக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நோய் பாதிப்பு இருப்போர் தேர்வு எழுத வேண்டாம் என்றும், அவர்களுக்கு தனியாக இன்னொரு நாள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகளை இப்போதைக்கு நடத்த வேண்டாம், அவற்றை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கவும், என்று கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோல பத்தனம் திட்டா மாவட்டத்திற்குட்பட்ட ஆலயங்கள், கோவில்கள், மசூதிகளில் வழிபாடு நடத்த பெருமளவில் மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளா முழுவதும் 1,116 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 149 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*