;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனாவை தடுக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரை 4,500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் தற்போது அதன் பாதிப்பு தாக்கம் மிக, மிக குறைந்து விட்டது. புதிதாக கொரோனா பரவுவதையும், உயிரிழப்பையும் சீனா நவீன தொழில்நுட்ப உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டது.

ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக வேகமாக பரவி வருகிறது. தற்போது 114 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதில் இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்சு ஆகிய 5 நாடுகளிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் அதிகமாக உள்ளது.

இந்த 5 நாடுகளில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 196 பேர் உயிரிழந்து இருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகத்தான் இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டாலும், பொது மக்களை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவும், கண்காணிக்கவும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. எனவே இதில் அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று மத்திய அரசு கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தது.

நேற்று மாலை இது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்துக்கு வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு விசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வர உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

மத்திய அரசின் திட்டப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர யாரும் விசா பெற முடியாது. ஆனால் அத்தியாவசிய மற்றும் அரசுப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தூதர்கள், சர்வதேச அமைப்புகளில் பணிபுரிபவர்கள், வேலைவாய்ப்பு திட்டங்களில் தொடர்புடையவர்களுக்கு விசா அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்சு, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளில் இருந்து பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு வந்தவர்கள் அல்லது அந்த நாடுகளின் வழியாக வந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்கத்து நாட்டு எல்லைகளை முழுமையாக மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அடுத்த இரு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1400 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசா இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கும் ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடக்கும் விழாக்களையும் ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 17 =

*