‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில்தான் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது அங்கு 24 பேர் நோய் பாதிப்புடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
கேரளாவை பொருத்தவரை அரசு ஆஸ்பத்திரிகள் அதிகம் உள்ள மாநிலம் ஆகும். இதனால் அதிக அளவு மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது கொரோனா வைரசுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றும் சந்தியா என்பவர் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை குழுவில் இடம்பெற்று உள்ளார். அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றி கூறியதாவது:-
டாக்டர்களும், நர்சுகளும் தங்களது மருத்துவ பணியை அர்பணிப்பு உணர்வுடன் தான் செய்து வருகிறார்கள். நான் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நர்சாக பணியாற்றி வந்தேன். திருச்சூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்க குழு அமைக்கப்பட்டபோது அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. தலைமை நர்சை சந்தித்து அந்த குழுவில் என்னை நான் சேர்த்துக் கொண்டேன். இந்த பணியில் அச்சப்பட ஒன்றும் இல்லை. மருத்துவ பணி என்பதை கடவுளுக்கு நன்றி கூறும் பணியாக கருதுகிறேன்.
ஏற்கனவே நிபா வைரஸ் பாதிப்பின்போதும் அது தொடர்பான தடுப்பு நடவடிக்கையில் என்னை ஈடுபடுத்திக்கொண்ட அனுபவம் தற்போது எனக்கு கைகொடுக்கிறது. நிபா வைரசை காட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது உள்ளது. உடல் முழுவதும் மூடிய உடை, கையுறை, முக உறை போன்றவை அணி வேண்டும். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கழுவ வேண்டும். உடைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டும். வீடு திரும்பியதும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆடைகளை அன்றே எரித்துவிடவேண்டும். உச்சகட்ட சுத்தத்தை அவர்கள் பராமரிக்க அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என்று தனி மருந்தோ, சிகிச்சையோ கண்டறியப்படவில்லை. ஆனாலும் நோயாளிகளின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மருந்துகள் அளிக்கப்படுகிறது. ஊட்டசத்துமிக்க உணவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். சுத்தத்தை பராமரியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.