கொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 147 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா அறிகுறி இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட சோதிக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தினமும் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஆய்வு முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயல்படும்.
கொரோனா வைரஸ்
அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும். இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை ஆவணங்கள் இல்லை.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் எங்களது ஆய்வை அடுத்த கட்டத்துக்கு மாற்றுவோம் என்றார்.