இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு..!!!

சீனாவில் தோன்றி மூன்றே மாதங்களில் உலகம் முழுவதும் பரவி ஊழித்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், சுற்றுலா மற்றும் இதர பணிகள் காரணமாக பல வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் இங்கு கொரோனா பீதி அதிகரித்துள்ள நிலையில் தங்களது தாய்நாட்டுக்கு செல்லும் விமானச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவர்களில் சிலரது விசாக்காலம் முடிவடைந்து விட்டதால் இந்திய குடியுரிமைத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலத்தை கருணை அடிப்படையில் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தீர்மானித்துள்ளது.
வழக்கமான விசா மற்றும் இ-விசா மூலம் இந்தியா வந்து மார்ச் 13-ம் தேதியுடன் அல்லது அதற்கு பின்னர் விசாக்காலம் காலாவதியான வெளிநாட்டினர் இந்த சிறப்பு சலுகையின்கீழ் ’ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்து, ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை தங்களது விசாக்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த காலக்கட்டத்தில் அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற விரும்பினாலும் அதிகமான நாட்கள் தங்கியதற்கான அபராதம் ஏதும் அவர்களிடம் வசூலிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.