நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை அனைத்து நட்சத்திர விடுதிகளும் மூடப்படும் என அறிவிப்பு..!!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவையும் ஆட்கொண்டுள்ளது. இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட) மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவ மாணவியர் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படும்.
இதேபோன்று உடற்பயிற்சி கூடங்கள், மியூசியங்கள், கலாசார மற்றும் சமூக மையங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் என அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களையும் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பேருந்து, ரெயில் உள்பட பொது போக்குவரத்து துறையை மிக குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பயணம் தவிர்க்கப்படல் வேண்டும். நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்புகளை நீக்கும் ஒழுங்கான மற்றும் முறையான விசயங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, அகில இந்திய நட்சத்திர விடுதிகள் சங்க துணை தலைவர் அபுபக்கர் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் வருகிற 31ந்தேதி வரை அனைத்து நட்சத்திர விடுதிகளும் மூடப்படும். நட்சத்திர விடுதி உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் சொகுசு கூடங்கள், மது அருந்தும் விடுதிகள் அனைத்தும் இதில் அடங்கும் என கூறியுள்ளார்.