;
Athirady Tamil News

திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 31-ந்தேதி வரை அனுமதி கிடையாது..!!!

0

கெரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஏழுமலையானை தரிசிக்க ஒரு வாரத்திற்கு அனுமதி ரத்து செய்தது. ஆனால் நாடு முழுவதும் தற்போது கெரோனா தொற்று பரவி வருவதால், பல மாநிலங்கள் இம்மாத இறுதி வரை முடக்கப்பட்டுள்ளது.

எனவே, தேவஸ்தானமும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதி வரை அனுமதி ரத்து செய்துள்ளது.

மேலும் திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளின் ஆரோக்கிய மற்றும் மருத்துவ வசதிகளை கருத்தில் கொண்டு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை திருமலை-திருப்பதி இடையே உள்ள மலைப்பாதைகளில் பயணிக்க உள்ளூர்வாசிகளின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.300 கட்டண விரைவு தரிசனம், ஆர்ஜித சேவை, வாடகை அறைகள் முன்பதிவு உள்ளிட்டவற்றை பக்தர்கள் ரத்து செய்யும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு ரத்து செய்து கொள்ளும் பக்தர்களுக்கு இம்மாதம் 25-ந்தேதி முதல் அவர்களின் வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும்.

மேலும் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. நாளை புதன்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி ஆஸ்தானமும் நடைபெற உள்ளதால், குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களை கோவிலுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்றார்.

பக்தர்களின் தரிசனத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பதி வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவில் முன்பு ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமலை- திருப்பதி தேவஸ்தான அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் தீவிரப்படுத்தி வருகிறது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களில் கொரோனா தொற்று பரவலை கண்காணிக்க அந்த அலுவலகங்களின் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டுள்ளது. தவிர, ஊழியர்கள் கைகளை துடைத்துக்கொள்ள வசதியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்ட துணிகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆந்திர அரசின் உத்தரவுப்படி 50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திலும், மற்ற 50 சதவீத ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி இ-ஆபிஸ் முறையிலும் சுழற்சி அடிப்படையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பிரம்மோற்சவ நாட்களில் மாடவீதியில் நடைபெறும் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தேரோட்டம் தீர்த்தவாரியையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − two =

*