;
Athirady Tamil News

கொரோனா வைரசை கட்டுப்படுத்த 123 ஆண்டுகள் பழமையான சட்டம்..!!!

0

எதை தின்றால் பித்தம் தெளியும்?

– தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு.

அதே போன்றுதான் என்ன செய்தால் இந்த படுபாவி கொரோனா வைரசை ஒழிக்க முடியும் என்றுதான் ஒட்டுமொத்த உலகமும் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 123 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ந்தேதி இயற்றப்பட்ட ஒரு சட்டமும் உதவுகிறது.

அந்த சட்டம்தான் தொற்றுநோய்கள் சட்டம் ஆகும்.

இந்த சட்டம், மாநில அரசுகளுக்கு சிறப்பு அதிகாரங்களை தந்துள்ளது.

பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, அது இந்தியர்களை சிறையில் தள்ளவும், அவர்களின் சொத்துகளை அழித்தொழிக்கவும் ஆங்கிலேயர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது பழங்கதை.

இப்போது நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் மாறும் காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்திலும் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதனால்தான் மாநில அரசுகள் இந்த சட்டத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என அனுமதி அளித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது. இப்போது இந்த சட்டத்தை முதலில் கர்நாடக மாநில அரசு கடந்த 11-ந்தேதி அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து அரியானா, மராட்டியம், தமிழகம், டெல்லி, கோவா என பல மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன. இந்த சட்டம்தான் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்கவும், பள்ளிகளை மூடவும், நிறுவனங்கள் இயங்குவதை முடக்கவும், வீடுகளில் இருந்து கொண்டே அலுவலகப்பணியை செய்யவும் வழிவகுத்து தந்திருக்கிறது.

அபாயகரமான தொற்றுநோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கு இந்த சட்டத்தின் பிரிவு 2 உதவுகிறது.

எந்த நேரத்திலும் எந்தப்பகுதியிலும் ஏதேனும் ஆபத்தான தொற்றுநோய் ஏற்படுகிறபோது, நடை முறையில் உள்ள பிற சட்டங்களின் விதிகள் இந்த நோக்கத்துக்கு போதுமானதாக இல்லை என்கிற போது இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் ரெயில் அல்லது பிற போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்கிற பொதுமக்களை பரிசோதிக்க முடியும்.

எந்தவொரு நோயாலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற சந்தேகம் அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுகிறபோது அவர்களை விலக்கி வைக்க முடியும்.

கப்பல் அல்லது பிற போக்குவரத்து சாதனங்கள் வந்து சேருகிறபோது அவற்றை சோதனையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு அனுமதி அளிக்கிறது.

எல்லைகளை மூடல், வாகன போக்குவரத்துகளை தடை செய்தல், பொதுமக்கள் கூடுவதை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டம் உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படுகிற உத்தரவுக்கு யாரும் பணிந்து நடக்காவிட்டால் அவர்களை இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 188-ன்கீழ் தண்டிக்கவும் முடியும்.

இந்த சட்டத்தின்படி செயல்படுத்துகிற எந்தவொரு நடவடிக்கைக்கும் அல்லது எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 8 =

*