;
Athirady Tamil News

உணவு உடை உறைவிடம்!! (மருத்துவம்)

0

சுகர் ஸ்மார்ட் தாஸ்

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம். உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்பதற்கு உண்மையிலேயே ஒரு லட்சம் காரணங்கள் இருக்கின்றன!

‘நான்தான் டயட்டில் இருக்கிறேனே… உடற்பயிற்சி செய்யாவிட்டால் பரவாயில்லைதானே’ என்று தமக்குத் தாமே சமாதானம் செய்துகொள்கிறவர்கள் பலர் உண்டு.

‘நாம ஒல்லியாத்தான் இருக்கோம். அளவாத்தான் சாப்பிடுறோம். அப்புறம் எதுக்கு எக்சர்சைஸ்?’ என்று எண்ணுவோரும் உண்டு.

‘எக்சர்சைஸ்? அதெல்லாம் ஃபிட்னஸ் ஃப்ரீக்ஸ் பண்ற வேலை… நாம இப்படியே பொழுதைக் கழிக்கலாம்’ என்று வேற்றுக்கிரக விஷயம் போல நினைப்போரும் உண்டு. இருக்கட்டும்… உடற்பயிற்சி செய்யாமலே இருந்தால் என்னதான் ஆகும்?உடற்பயிற்சி என்பது ‘ஃபிட்’டாக வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல… நலம் பேணுவதற்கான ஒரு விஷயம். நலம் என்பது ஏதோ இருமல், தும்மல் வராமல் இருப்பது மட்டுமல்ல… இது ஆரோக்கியமான இதயம், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, உறுதியான எலும்புகள் உள்பட பல விஷயங்களைக் கொண்டது.

இதய நோய்கள், சுவாசப் பிரச்னைகள், ரத்த ஓட்ட நோய்கள் போன்றவற்றை வராமல் தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காகச் செலவிடுகிறவர்களுக்கு ரத்தக்கொதிப்புப் பிரச்னை இருக்காது என்பதை நீங்கள் நேரடியாகவே அறிய முடியும். ஒரு மணி நேரம் முடியவில்லையா? அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறவர்களால் கூட, கார்டியோ வஸ்குலர் பிரச்னைகளைத் தவிர்த்து, ஏராளமான கலோரிகளையும் எரிக்க முடியும்! மொத்தத்தில் நீரிழிவாளர்களுக்கு மட்டுமல்ல… நம் ஒவ்வொருவருக்குமே உடற்பயிற்சி என்பது உணவு, உடை, உறைவிடம் போல ஒரு வாழ்க்கை முறையே!

உடற்பயிற்சி செய்யாத சூழலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? முக்கியமாக 8!

1. நெகிழ்தன்மை (Flexibility)

முதுமைப் பருவத்தில் (இன்று நடுத்தர வயதிலும்) ஏற்படுகிற பல்வேறு உடலியல் சிக்கல்களுக்கு இளமைப் பருவத்தில் உடற்பயிற்சி செய்யாமல் போனதே காரணமாக இருக்கிறது. நம் தசைகளை வலுப்படுத்துவதோடு, நெகிழ்தன்மை உடைவதாகவும் செய்து, உடலை இலகுவாக உணர வைப்பதை உடற்பயிற்சியே சாத்தியமாக்கும். நெகிழ்தன்மை இருந்தால் மட்டுமே, உடலை வளைக்க ஏன் குனியவோ, நிமிரவோ கூட முடியும். ஒரு பொருளைத் தூக்குவது, இடம் மாற்றுவது கூட, இந்த நெகிழ்தன்மை குறைந்து போனால் கடினமே.நம்மில் எத்தனை பேருக்கு தரையில் சம்மணமிட்டு (Sitting cross-legged) அமர்ந்து சாப்பிட முடியும்?

2. இதயப் பிரச்னைகள்

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையில் மன அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கும். நேர நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பது, தூக்கமின்மை ஆகியவை இதோடு சேரும் போது, இதயம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு வாசலை திறந்து விடுகிறோம். தமனித்தடிப்பு (Atherosclerosis), மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் உள்பட பல இதயச் சிக்கல்களைத் தவிர்க்க உடற்பயிற்சியே உன்னதம்.மிக எளிய உடற்பயிற்சிகளான வாக்கிங், ஜாக்கிங் போன்றவை கூட கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவுகளைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் ஆக்சிஜெனேற்றம் எனும் வேதிவினையாகும் நிலையையும் தவிர்க்கிறது. இதனால் பல இதயப்பாதிப்புகளிலிருந்து தப்ப முடியும்.

3. தசைப் பிரச்னைகள்

உடற்பயிற்சி இல்லாத சூழலில் தசைகள் பலவீனப்பட்டுக்கொண்டே இருக்கும்… நலிந்து போகும்… வீணாகும். அடுத்த கட்டமாக எளிதில் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகும். ஒழுங்கான உடற்பயிற்சி செய்யும்போது தசைகளின் நிறை அதிகரிக்கும். நெகிழ்தன்மை கிடைக்கும். தசைப்பிடிப்புகள் வராது. முக்கியமாக… குனிந்து பொருட்களை எடுக்கும்போது முதுகு வலிக்காமல் இருக்கும்.

4. எடை / பருமன் பிரச்னைகள்

உடற்பயிற்சி இல்லாவிடில் எடை அதிகரிக்கும்… அது பருமனாகவும் மாறும். இது அனைவரும் அறிந்ததே. எடை குறைக்க விரும்புகிறவர்களில் பலர் உணவுக்கட்டுப்பாட்டை மட்டுமே பின்பற்றுகின்றனர். உடற்பயிற்சி பற்றி கவலை கொள்வதில்லை. உணவுக்கட்டுப்பாடு காரணமாக, எடை அதிக அளவு அதிகரிக்காமல் இருக்கலாம். எடை குறைய வேண்டுமானால், உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும். மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், செரிமான செயல்பாடுகளை ஒழுங்காக்கவும் முடியும். இம்மூன்றும் நம் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் பருமனைக் குறைக்கவும் உதவும்.

5. மன அழுத்தப் பிரச்னைகள்

இன்றைய அதிவேக உலகில் பலருக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி வருகிறது மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்). வீட்டிலும் வேலையிடத்திலும் சுற்றுப்புறத்திலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அதைத் தவிர்க்கவும் சிறந்த வழி உடற்பயிற்சியே. அது மட்டுமல்ல… இது உடனடியாகவும் பலன் தரக்கூடியது!மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடலின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

கார்டியோ வஸ்குலர் எனும் இதயச் செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கிறது. காஸ்ட்ரோ இண்டஸ்டினல் எனும் குடல் சார்ந்த செயல்பாடுகளோ வேகம் இழக்கின்றன. இதன் விளைவாக கோர்ட்டிசோல் எனும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரக்கத்தொடங்குகிறது. உடற்பயிற்சி என்ன செய்கிறது தெரியுமா? அது நல்ல மனநிலைக்கு அடிப்படையான எண்டோர்பின் ஹார்மோனை சுரக்கத் தூண்டுகிறது. இந்த ஹார்மோன் கோர்ட்டிசோல் சுரப்பதைக் குறைக்கவோ, வேகத்தைக் கட்டுப்படுத்தவோ செய்யும். இதனால் ரத்தக்கொதிப்பு, பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைத் தவிர்க்க முடிகிறது.

6. பாலியல் சிக்கல்கள்

மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல… தாம்பத்திய வாழ்க்கைக்கும் நண்பனாகத் திகழ்வது உடற்பயிற்சிதான். மன அழுத்தம் பாலுறவுச் சிக்கல்களை அளிக்கும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சி ஒழுங்காகிற போது, பாலுணர்ச்சி நல்ல முறையில் ஏற்படும். தாங்குதிறனும் (ஸ்டெமினா) வலிமையும் (ஸ்ட்ரென்த்) கிடைக்கும். இவை எல்லாம் இணைகிற போது, உறவு மகிழ்ச்சியை அளிக்கும். பொதுவாகவே நீண்ட கால நீரிழிவாள ஆண்களுக்கு ED என்கிற விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவது உண்டு. உடற்பயிற்சி மேற்கொள்கிற போது, இந்தப் பிரச்னையையும் தவிர்க்க முடியும்.

7. எலும்புக் குறைபாடுகள்

உடல் செயல்பாடுகள் குறைவதன் இன்னொரு பிரச்னை எலும்புகளிலும் எதிரொலிக்கும். உடற்பயிற்சி இல்லாதோருக்கு ஆஸ்டியோபொரோசிஸ், ஆஸ்டியோஆர்த்ரிட்டிஸ் போன்ற எலும்புக் குறைபாடுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். மூப்பின் காரணமாக எலும்பின் அடர்த்தியும் நிறையும் குறையுமே… அதைக்கூட உடற்பயிற்சிதான் கூடிய வரை தள்ளிப் போடுகிறது. எலும்பின் அடர்த்தியும் நிறையும் இழக்கப்பட்டால், அது எளிதில் உடைந்து போகும்… எலும்பு முறிவுகள் ஏற்படுவதும் எளிதாகும்.

நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, மலையேற்றம், படி ஏறுதல், டென்னிஸ், நடனப் பயிற்சி, வெயிட் டிரைனிங் ஆகியவை ‘வெயிட் பேரிங்’ உடற்பயிற்சிகளைச் சேர்ந்தவை. இவற்றில் ஒன்றோ, பலவோ ஒழுங்காகச் செய்யப்படும்போது, எலும்புகளும் பாதுகாக்கப்படும். இந்த உடற்பயிற்சிகளோடு, கால்சியம், பொட்டாசியம் கொண்ட முறையான உணவும் உட்கொண்டால், எலும்புகள் பாதுகாக்கப்படுவதோடு, உறுதியும் கிடைக்கும்.

8. மனநலக் கோளாறுகள்

மனதை மகிழ்விக்கும் எண்டோர்பின் போன்ற ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் திறன் உடற்பயிற்சிக்கு உண்டு என்பதை ஏற்கனவே அறிந்தோம். இதன் காரணமாக கோர்ட்டிசோல் சுரப்பு குறைவதால், மனச்சோர்வு (Depression) நீங்கும். ஒரே ஒரு மணி நேர உடற்பயிற்சியிலேயே இதை நாம் உணர முடியும். முந்தைய மனநிலை எப்படியிருந்தாலும், உடற்பயிற்சிக்குப் பின் லேசான, தெளிவான ஒரு மனநிலையை எட்ட முடியும். இந்த நல்ல மனம் நாள் முழுக்கவும் நீடிக்கும் என்பது மற்றொரு சிறப்பு.

மன அழுத்தத்தைக் குறைத்து, மனச்சோர்வை விரட்டி, உடலைச் செம்மைப்படுத்தி, ஆரோக்கியமான இதயத்தையும் எலும்புகளையும் அளித்து… இப்படி எத்தனை விதமான நலன்களை நீரிழிவாளர்களுக்கு அளிக்கிறது இந்தஉடற்பயிற்சி. ஆகவே, இன்றே தொடங்குவோம்… என்றும் தொடர்வோம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − one =

*