சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கப்பட்டது.
15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும்.
இந்த நாட்களில் சிறப்பு பூஜைகளான உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.