;
Athirady Tamil News

அமிர்தத்துக்கு இணையான வல்லாரை!! (மருத்துவம்)

0

வல்லாரையானது பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் எளிதாக வளரக்கூடியது. இந்த தாவரம் நீர் நிலையும் ஈரப்பதமும் இருந்தால் கடல்மட்டத்திலிருந்து எல்லா உயரத்திலும் வளரக்கூடிய இந்த தாவரம் தமிழகத்தைப் பொருத்தவரை கொடைக்கானல் மலைகளிலும் கேரளத்தில் மூணாறு பகுதிகளில் காணப்படுகின்றன. தேயிலைத் தோட்டங்களிலும் அதுபோல நீர்நிலைகளின் ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் குறிப்பாக நெல் வயல்களிலும் ஒரு காலத்தில் மிக அதிகமாகவும் எளிமையாக தரையை நன்றாக படர்ந்து வளர்ந்த ஒரு தாவரமாகும். தென்னந்தோப்புகள் இடைவெளியில் கூட மிக அதிக அளவில் வருகிற ஒரு கொடி வகையைச் சார்ந்த வல்லாரை மிக முக்கியம் என்றால் மிகையாகாது. சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் உண்டு.

வல்லாரை தின்ன வல்லாரை யார் நிகர்வர் கல்லாரை போல கலங்க இலவனம் சாதிப்பத்திரி உண்ண போமே வல்லை பிணி! அதாவது வல்லை பிணி என்பது வயிற்றில் ஏற்படுகிற வேதனையைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். வல்லாரை நினைவாற்றலை அதிகரிக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதுபோலவே மனச்சோர்வு அதாவது டிப்ரஷன் என்று சொல்கிற நோயில் ஏற்படுகிற வேதியியல் மாற்றங்களை தடுக்கிற தன்மையும் வல்லாரைக்கு உண்டு. இதன் காரணத்தால் மனச்சோர்வுக்கான மருந்திலும் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது.

வல்லாரையை நினைவாற்றலுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்துகிறபோது நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு வல்லாரையை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இதில் மூளையில் ஏற்படுகிற வேதிப் பொருட்களை அதிக அளவில் தூண்டிவிடுகிறது. நரம்புகளைத் தூண்டி அதன் மூலமாக வலிப்பு வருவது அதிகரிக்கிற வாய்ப்பிருக்கிறது. எதிர்வினைகள் என்று சொல்கின்ற அலர்ஜி ஏற்படுத்துகின்ற காரணத்தால் உடலில் அரிப்பு இருப்பவர்கள் வல்லாரையை பயன்படுத்துகிறபோது அரிப்பு அதிகமாக இருக்கும். இந்த இரண்டு நிலைகளிலும் வல்லாரை விட நீர் பிரம்மி சிறந்ததாக இருக்கும். ஆனால், மனச்சோர்வை நீக்குவதற்கு என்று சொல்கிறபோது வல்லாரைதான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

வல்லாரையை பற்றிய மற்றுமொரு பாடலும் உண்டு.
அக்கர நோய் போகும் அகலும்
வயிற்றிழிவுந்
தக்க விழுத்த கடுப்புத்தான் போக்கும்
-மைக்குழவீர்
எல்லாரும் சொல்வார் இயல்பறியார்
மானுடர்கள்
வல்லாரை செய்யும் வகை

இந்த பாடல் நாவில் ஏற்படுகிற புண், வயிற்றில் ஏற்படுகிற கடுப்பு, மூலத்தில் ஏற்படுகிற ரத்தப்பெருக்கு ஆகியவற்றைத் தீர்க்கும் திறன் கொண்டது வல்லாரை என்பதை உணர்த்துகிறது. அதுபோல் விரணங்களைத்(காயங்களை) தீர்க்கிற தன்மையும் உண்டு. குறிப்பாக, ரத்த நாளங்களில் ஏற்படுகிற அடைப்பின் காரணமாக கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு உபயோகிக்கும் தைலங்களிலும் கூட வல்லாரையை சேர்ப்பது நமக்கு பயனாக
இருக்கிறது.

வல்லாரையானது தோல் நோய்களிலும் மிக சிறப்பாக வேலை செய்கிறது. இது சிறு புண்கள், ஆழமான புண்கள், தீ காயங்கள் காளாஞ்சகப்படை ஆகியவற்றின் மருத்துவத்தில் சிறப்பாக வேலை செய்கிறதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொலாஜென்(Collagen), ஃபைப்ரோபிளாஸ்ட்(Fibroblast), திசுக்களுக்கு இடையில் உள்ள ஃபைப்ரோனெக்டின்(Fibronectin) ஆகியவற்றை வளர்ப்பது மூலம் நோய் தீர்ப்பதாக இது விளக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் கண்ட இடத்தில் தோன்றும் புதிய தோலை வலுப்படுத்துவதின் மூலமும் வீக்கத்தை(Inflammation) குறைப்பதன் மூலம் இது வேலை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சூரிய ஒளியினால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் சேதங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்றும் அறியப்படுகிறது. இதிலுள்ள சபோனின்களும் ட்ரிடெர்பென்களும் வல்லாரைக்குள்ள காயம் ஆற்றும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைக்கும் வல்லாரை முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. சீனர்கள் உயிரை காக்க வல்ல அமிர்தத்தை போன்றது என்று வல்லாரை பற்றி பெருமையாகக் கருதுகின்றனர். மேலும் அவர்கள் இதன் முக்கியத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்துள்ளனர். இதில் சம்பல்(சட்னியைப் போன்ற உணவு) செய்து சாப்பிடுவார்கள். இது சிங்களத்தில் மிகவும் பிரபலம். பருப்பு சேர்த்து கீரையாகவும் சாப்பிடுவார்கள். தரையில் நன்கு படர்ந்து வளரும். இதில் கேரட்டின் மணம் வரும் என்பது கூடுதல் சிறப்பு!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − seven =

*