;
Athirady Tamil News

குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! (மருத்துவம்)

0

அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான். சுவையான விருந்துகளுக்கு மட்டுமல்ல, அடிப்படையில் தென்னிந்திய சமையல்களில் (சைவம் மற்றும் அசைவம்) பெரும்பாலும் புளியின் முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டது குடம் புளி. சுவை மட்டுமின்றி உடல்நலனுக்கும் சிறந்ததாக இருக்கும் குடம்புளி பற்றி மேலதிக தகவல்களை நமக்களிக்கிறார் இயற்கை மருத்துவர் சீனி.

‘‘கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம்புளி. குறிப்பாக அங்கே மீன் கறி சமைக்க குடம்புளியைப் பரவலாக உபயோகிக்கின்றனர். இந்த குடம்புளியைத்தான் தமிழகத்தில் நம் முன்னோர்களும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். காலப்போக்கில்தான் நாம் தற்போது உபயோகிக்கிற
புளி வழக்கத்திற்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் புளியை போன்று அதிக விளைச்சல் இல்லாதது குடம்புளி. பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் விளையக் கூடியது. தென்னிந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்தான் அதிகமாக விளைகிறது. மேலும் இலங்கை, மியான்மர், வடகிழக்கு ஆசியா போன்ற இடங்களில் விளைந்தாலும் குடம் புளியின் தாயகம் இந்தோனேஷியாதான்.

கோக்கம் புளி, மலபார் புளி, பானை புளி, மீன் புளி, கொடம்புளி, சீமை கொறுக்காய் (இலங்கை) என்று வேறு பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் புளியின் தாவரவியல் பெயர் Garcinia gummi-gutta. குடம்புளி டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் சிறிய பூசணிக்காய் போல் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பழத்தைக் கொட்டை நீக்கி காய வைப்பார்கள். காய்ந்த பழக்கொத்தை புகைமூட்டுவார்கள். இதில் 30 சதவிகிதம் வரை ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் இருக்கிறது. பழம் காய்ந்தவுடன் நன்கு கருத்த நிறத்தில் இருக்கும். காய்ந்த குடம்புளி பல ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குடம்புளியின் பழப்பகுதியை அப்படியே பயன்படுத்தலாம், இல்லையெனில் நன்கு காய வைத்த குடம் புளியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே குடம்புளி கிடைத்து வந்தது. இப்போது மக்களின் உடல் ஆரோக்கியத்தின் விழிப்புணர்ச்சி காரணமாக ஆர்கானிக் கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால், குடம் புளியின் விலை சாதாரண புளியை விடவும் அதிகம். குடம்புளி… மிதமான புளிப்புத்தன்மை உடையது. அமிலத்தன்மை இருக்காது. இந்த புளியில் சமைத்தால் சமையல் மணமாக இருக்கும். சுவையும் மணமும் கொண்ட குடம்புளியை சாதாரண புளியை போல ஊறவைத்துச் சமையலில் சேர்க்க இயலாது.

கொதிநிலையில் இருக்கும் குழம்பு வகைகளோடு இதைச் சேர்க்கலாம். இந்த குடம் புளியை சமையலில் சேர்த்து சமைத்தவுடன் புளியை வெளியே எடுத்து விடவேண்டும். நேரம் ஆக ஆக சமைத்த உணவில் புளிப்பு சுவையை அதிகரித்துக் கொண்டே போகும். இயற்கையான முறையில் விளையும் இந்த குடம்புளியை கொண்டு சாம்பார், காரக் குழம்பு, ரசம் என தினசரி சமையலுக்குப் பயன்படுத்தலாம். ஊறுகாய், சட்னி போன்றவையும் செய்து சாப்பிடலாம். மேலும் வெயில் காலத்தில் குடம் புளியின் உள்ளே இருக்கும் சதையுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்து பானகம் போல செய்தும் சாப்பிடலாம்.

ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது குடம் புளி, அதனால் இதனை மருத்துவ புளி என்றும் அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் புளி அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு ஆகாது. ஆனால் குடம்புளியில் அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கும் ஏற்றது. செரிமான கோளாறு உள்ளவர்கள் குடம் புளியைத் தினமும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவாக இருந்தாலும் எளிதாக ஜீரணமாக உதவும். அதீத பசியைத் தூண்டும்
உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் மாரடைப்பு மற்றும் இதய கோளாறு வராமல் தடுக்கிறது
மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

அதனால் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்தக் குடம் புளியைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் மெலிவதற்காகத் தயாரிக்கப்படும் பல மருந்துகளில் முக்கிய இடம் வகிக்கிறது குடம் புளி. எடை குறைப்புக்காக உதவும் மருந்துகள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், குடம் புளி நிறைவான பலன்களைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வீக்கம் இருக்கும் இடத்தில் குடம்புளியுடன் மஞ்சள் சேர்த்து பற்றிட வலி, வீக்கம் குறையும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவும். ஈரலை பாதுகாக்கும். குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.

உடல் தசைகளை வலுவாக்கும். நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகச் செயல்பட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடம்புளி வாதம் போன்ற ஆர்த்ரைட்டீஸ் வியாதிகளுக்கு கஷாயமாக செய்து கொடுக்கப்படுகிறது. குடம்புளியின் பழத்தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மருந்தாகவும் குடம் புளியைப் பயன்படுத்துகின்றனர். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குடம் புளி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

ரப்பர் மரத்தில் இருந்து வடியும் பாலை கெட்டிப்படுத்த குடம் புளி உதவுகிறது. அதுபோல் தங்கம், வெள்ளியை பளபளக்க செய்யவும் குடம் புளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடம்புளி சாறுகளை பசியைக் குறைக்க பயன்படுத்த ஊக்குவித்தனர். இதனால் எடை குறைய வாய்ப்பு அதிகம் என எலிகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். குடம்புளி கட்டிகளில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை அறிய 2013 Investigational New drug journal நடத்திய ஆய்வில் குடம்புளி கொடுத்த எலிகளில் குறைந்த கட்டி வளர்ச்சி இருந்ததை கண்டறிந்தார்கள். குடம்புளி பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய விஷயம்… அதிக அளவு எடுத்துக் கொள்வதினால் ரத்தம் உறைதல் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவு தாண்டாதீர்கள்!’’

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + thirteen =

*