;
Athirady Tamil News

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!! (படங்கள்)

0

மலையகத் தமிழர்களால் மாபெரும் அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (31.05.2020) மாலை தீயுடன் சங்கமமானது.

அவ்வேளையில் நோர்வூட் மைதான வளாகத்தில் இருந்த இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்களும், ஆறுமுகன் தொண்டமானின் குடும்ப உறுப்பினர்களும், பொது மக்களும் கதறி அழுதனர்.

இறுதிக்கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துக்கு 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததால் மைதானத்துக்கு வெளியில் தேயிலை மலைகளில் இருந்தும், சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடாக தோட்டங்களில் இருந்தும் தமது தலைவரின் இறுதி பயணத்தை கண்ணுற்ற மக்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுததால் மலையகம் சோகமயமானது.

மாரடைப்பால் கடந்த 26 ஆம் திகதி காலமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இரண்டு நாட்களாக கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் கம்பளை – நுவரெலியா வீதியூடாக வாகன பேரணியில் இரம்பொடை வேவண்டன் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அன்னாரின் பூர்வீக இல்லத்தில் வைத்து ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடுகளும், இந்துமத முறைப்படியிலான சடங்குகளும் இடம்பெற்றன.

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்னற்றி விழிநீர் அஞ்சலி செலுத்தினர். மக்கள் அலைகடலென திரள ஆரம்பித்ததால், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் பொலிஸ் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீதிகளில் இருமருங்கிளில் காத்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொட்டகலை சிஎல்எப் வளாகத்தில் வைத்து சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இரு நாட்களாக அஞ்சலி செலுத்தினர். இவ்விரண்டு நாட்களும் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பொது சுகாதார அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டனர். புலனாய்வாளர்களும் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். பொலிஸாரின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் திருப்பியனுப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணியளவில் கொட்டகலையில் இருந்து நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. மக்கள் வீதிகளில் இருபுறங்களிலும் இருந்து கதறி அழுது தமது தலைவருக்கு விடைகொடுத்தனர்.

நோர்வூட் மைதானத்தைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சூழல் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சர்வமதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில பிரமுகர்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், அமரர் தொண்டமானின் குடும்பத்தாரும் என 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வழிபட்டனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சேவைகளையும் பட்டியலிட்டனர். அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி சேவையாற்றிய தலைவர் எனவும் பாராட்டினர்.

சர்வமத தலைவர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுதாப செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாப செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பாராட்டிய பிரதமர், இறுதி சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார்.

இவ்வாறு இரங்கல் உரைகள் முடிவடைந்த பின்னர் இந்துசமய முறைப்படி மகன் ஜீவன் தொண்டமான் மொட்டையடித்து, பூதவுடலுக்கு கொல்லி வைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழில் அஞ்சலி.!! (வீடியோ,படங்கள்)

ரம்பொடை வேவண்டனில் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!! (படங்கள்)

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது!! (படங்கள்)

வவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி!! (படங்கள்)

ஆறுமுகனின் இழப்பு நிரப்பமுடியாத வெற்றிடம் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!!

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி!! (படங்கள்)

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி!! (படங்கள்)

மலையக தமிழ் மக்களின் தலைவரின் மறைவிற்கு புளொட் இரங்கல்!

ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்!!

தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் !!

தொண்டமானின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்!!

ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு அங்கஜன் ஆழ்ந்த இரங்கல்கள்!! (படங்கள்)

மலையகத்தின் மிடுக்கு மரணித்துப் போனது..!!

ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்!! (வீடியோ, படங்கள்)

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.!!

தொண்டமானின் இழப்பு தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு : பிரதித்தலைவர் ஹரீஸ் இரங்கல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*