;
Athirady Tamil News

கொரோனாவும் கடந்து போகும்!! (மருத்துவம்)

0

கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. நோய் உண்டாக்கும் பயம், பொருளாதார நெருக்கடி, செய்திகளின் தொடர் எச்சரிக்கைகள் என்று உளவியல் ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா கால இந்த உளவியல் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது? உளவியல் ஆலோசகர் பாபு ரங்கராஜன் பதிலளிக்கிறார்.

‘‘ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் நம்மைச் சிறை வைத்தது போன்ற ஒரு உணர்வு. காதுகளின் வழியாக வெப்பம் வழிந்தோட, ‘எப்போதான் இந்த வைரஸ் பிரச்னை முடிவுக்கு வருமோ என்ற ஏக்கம் மனதில்’ தோன்றுகிறது. தனிமையில் இருந்து விடுபட நண்பருக்கோ, உறவினருக்கோ போன் செய்தால் ‘ஆலோசனை’ என்ற பெயரில் அவர்கள் பகிரும் தகவல்கள் பயத்தின் டெசிபிளை எகிற வைக்கிறது. இதுவரை மனதை அமைதிப்படுத்திய எல்லாம் அர்த்தம் இழந்து நிற்கிறது. உலக மக்கள் அனைவரும் ஒரு வைரஸின் கட்டுப்பாட்டில் சிறப்பட்ட உணர்வு. இந்த நெருக்கடியான நேரத்தில், நம்மைக் காப்பதற்கான முதல் தேவை தன்னம்பிக்கை. சுய தனிமைப்படுத்துதலுடன் நமது தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமான வைரஸ்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் மக்களுக்கு அதிகபட்ச சோதனையாக மாறியுள்ளது. மக்கள் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பாதிப்புக்கள் உலக மக்கள் மத்தியில் பெரியளவில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் உடல்நலத்துடன் மன நலனையும் பாதுகாப்பது இப்போது முக்கியம். மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதுதான் ஒருவர் எந்த இக்கட்டான சூழலையும் வெற்றியுடன் கடக்க முடியும். நாம் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்க வேண்டும். தனிமையைக் கடைப்பிடிப்பதுடன் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். வைரஸ் நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை உங்கள் மனதிலேயே உண்டாகும். நினைத்த நேரத்தில் நினைத்த விஷயங்களைச் செய்து கொண்டிருந்த நமக்கு, தனிமைப்படுத்துதல் ஒருவித பதற்றம் மற்றும் பயத்தையும் சேர்த்து உண்டாக்கியிருக்கிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு நெருக்கடியான சூழல் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதனால் அவர்களது தன்னம்பிக்கை குறைந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறையச் செய்யும் வாய்ப்பு அதிகம். சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கும் கூட வைரஸ் தொற்று உள்ளது போன்ற எண்ணம் உண்டாகும்.

ஓ.சி.டி. பிரச்னை உள்ளவர்கள் இயல்பாகவே கைகளை அடிக்கடி கழுவுவது, துடைப்பது என இருப்பார்கள். அவர்கள் இந்தச் சூழலில் அதிக சிரமத்தை சந்திப்பார்கள். ஆனாலும் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த பிரச்னைகளை எல்லாம் சுமையாகக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும். ஓர் உயிர்க்கொல்லி நோய் பரவிக் கொண்டிருக்கும்போது நாம் உயிர் வாழ்வதே பெரிய அதிர்ஷ்டம்தான். இந்த நன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தனித்திருப்பதால் உண்டாகும் சிரமங்கள் சரிசெய்துவிடக் கூடியவையே. அதனால் லாக் டவுனை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அன்றாடக் கூலியை நம்பியிருப்பவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் பண இழப்பை கடுமையாக சந்தித்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த நிதிச் சிக்கல்களை தள்ளிப்போட்டுச் சமாளிக்கலாம் என்று பாசிட்டிவாக நம்புங்கள்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் குடும்பத்தினருடன் விளையாடலாம், ஓய்வெடுக்கலாம். இணைந்து சமைக்கலாம். அவரவருக்கு பிடித்த கைவேலைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாம். புத்தகம் படிக்கலாம். நாம் இருக்கும் இடத்தை இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். சோஷியல் மீடியாவின் துணையுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசுங்கள். நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதே ஒவ்வொரு நெருக்கடியும் நமக்குச் சொல்லும் செய்தி. அந்த வகையில் கொரோனாவும் நம்மை நிச்சயமாக கடந்து போகும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*