;
Athirady Tamil News

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி உருவானது ஏன்?

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது விரக்தியடைந்த நிலையில் மாற்றுத் தேவை என்ற சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையின் அவசியம் ஏற்பட்டது. இதனடிப்படையில் தான் நாம் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியாக இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நேற்று (30.06.2020) மல்லாகம் குளமங்காலில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை இணைத்த ஒரு கூட்டணியாக அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இருக்கக் கூடிய கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னர் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தோம். எனது தலைமையிலான கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் பிரதிநிதிகளாக பலபேர் இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

விக்னேஸ்வரன் ஐயா அவர்களை வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கட்டாயம் அவர் இதில் பங்கு பற்ற வேண்டும். தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பிப்பதில் நீதியரசர் என்ற வகையில் அவர் ஒரு காத்திரமான பங்கு வகிக்கலாம் என்ற அடிப்படையில் அழைத்து வரப்பட்டார்.

அவ்வாறு அழைத்து வரப்பட்டவருக்கு எதிராக மாகாண சபையில் அவர்களே நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள்.

அவ்வாறு ஏன் அந்;தத் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள் என்றால் அவர் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதாவது, இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதுதான் அந்தத் தீர்மானம். இத்தீர்மானம் ஆட்சியாளரை சங்கடப்படுத்தும் என்பதால் கூட்டமைப்பு தலைமை எதிர்த்தது.

மேலும் அவர்கள் இறுதி யுத்தத்தைப் பற்றி விசாரிக்க ஐ.நா.பொதுச் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்தார்.

அந்தக் குழு யுத்தம் நடைபெற்ற இறுதிக் காலத்தில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றன என்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை அவசியம் என்றும் பரிந்துரைத்தது.

அதனை விசாரிப்பதற்கு ஜெனீவா மனித உரிமையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகமும் அது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றியது.
இறுதியில் இலங்கை அரசும் அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும். அதில் உள்நாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கலாக கலப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் யுத்தக் குற்றங்கள் எவ்வாறு நடந்தது என்றும் ஏன் நடைபெற்றது என்றும் விசாரிக்கப்பட வேண்டும், அதற்குப் பெறுப்பானவர்கள் யார் என்றும் எதிர்காலத்தில இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அது மட்டுமல்லாமல் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், முப்படையினரிடம் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் சம்பந்தமான தெளிவான முடிவுகளை அரசு எட்ட வேண்டுமென அந்த ஜெனீவாத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கடந்த காலத்தில் இருந்த அரசு இத்தீர்மானங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக ஒத்துக் கொண்டாலும் அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அறிவித்தார்கள். அது மாத்திரமல்லால் தற்போதுள்ள கோட்டாபய அரசு ஜெனீவாவில் இத்தீர்மானத்தில் இருந்து விலகி விட்டார்கள். நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எமது இராணுவத்தினரை யாரும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார்கள்.
ஆனால், இந்த விடயங்கள் நடைபெற்ற காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வசம் வைத்திருந்தது.

இவை அனைத்தும் நடைபெற்ற பொழுது சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
ஆனாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் கொண்டு வந்த அரசாங்கம், நாங்கள் கொண்டு வந்த ஜனாதிபதி ஆகவே இவர்கள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று கூறப்பட்டது.

அவர்களுடைய பதவிக் காலத்தில் புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படும் அதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பல விடயங்களை தெரிவித்தார்கள்.

அரசியல் சாசனத்தை கொண்டு வருவதற்காக சம்பந்தன் அவர்கள் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக எதனையுமே பேசவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் சம்பந்தமாக பிரச்சினைகளை பேசினால் அரசியல் சாசனம் குழம்பிவிடும் என்று காரணம் கூறப்பட்டது.

இறுதியில் அரசியல் சாசனமும் இல்லை ஏனைய அடக்கு முறைகளுக்கான தீர்வுகளையும் எட்ட முடியவில்லை.

அரசியல் சாசன விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிடுகையில், முக்கியமான ஒன்றாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினுடனாக வடக்கு – கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டது.

இணைக்கப்பட்டதற்கு காரணமாக இருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடம், அவர்கள் ஒன்றாக வாழவிரும்புகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது.

திருகோணமலை தலைநகராக மாற்றப்பட்டது. 18 ஆண்டுகளின் பின் வடக்கு – கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டது.

இன்றைய சூழலில் அதாவது, யுத்தத்துக்கு பின்னர் உள்ள காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் வடமாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, நாவற்குழி ஆகிய இடங்களில் ஏறக்குறைய 20000 ற்கு மேற்பட்டோர்.
குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதியால் கிழக்கு மாகாணத்தில் புதிய செயலணி ஒன்றை மேதானந்த தேரர் உட்பட்ட தேரர்களையும் இராணுவத்தையும் உள்ளடக்கி உருவாக்கியுள்ளார்கள்.

எதற்காக என்றால் கிழக்கில் உள்ள சிங்கள் பௌத்த சின்னங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றை அடையாளங் கண்டு அந்த இடங்களை தம்வசப்படுத்தி கிழக்கை மேலும் சிங்கள – பௌத்தமயமாக்குவதற்காகவே.

தமிழ் மக்களின் வரலாறு 3000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு. இவர்கள் யாரும் இந்தியாவில் இருந்து வந்து குறியேறியவர்கள் இல்லை.

ஆனால், மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து 700 தோழர்களுடன் வந்ததாக குறிப்பிடுகின்றது.

அது மட்டும் அல்லாமல் விஜயன் வருகின்ற பொழுது இலங்கையில் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்தாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறிப்பிடுகின்றார்கள். அது மாத்திரமல்லாமல் இலங்கையை ஆண்டவன் இராவணன். ஒரு சிவ பக்தன். இராமாயண காலம் 10000 வருடங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இன்றைய சூழலில் இராவணனுக்கும் கூட உரிமை கோர ஆரம்பித்துள்ளார்கள் பௌத்தர்கள்.
திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீறூற்று கிணறு இராணவனால் தனது தாயின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாக ஐதீகங்கள் கூறுகின்றன. ஆனால் இன்று முழுமையாக சிங்கள பௌத்தர்களால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டன. அங்கிருந்த சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் முற்றுமுழுதாக அழிகப்பட்டு விட்டது.

எமது உரிமைகளுக்காக செல்வநாயகம் போராடினார், அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அது சர்வதேசத்தின் உதவியுடன் மௌனிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் வந்த கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் தீர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர்கள் இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே முழுமையாக ஒன்றாக இருந்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் பதவி பறிபோன போது உயர் நீதிமன்றம் வரை சென்று அவரது பதவியைக் காப்பாற்றிய போது கூட எமது பிரச்சினைகள் தொடர்பாக எந்த விடயத்தையும் தீர்க்கவில்லை.

இப்படியான ஒரு சூழலில்தான் மாற்றுத் தேவை என்ற சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையின் அவசியம் ஏற்பட்டது.

இதனடிப்படையில் தான் நாம் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியாக இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*