;
Athirady Tamil News

எளிமையாக இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வியின் பன்னிரண்டாவது ஆண்டு குருபூசை!! (வீடியோ, படங்கள்)

0

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான முன்னாள் பெருந்தலைவரும், உலகம் போற்றும் ஆன்மீக அன்னையாகவும் விளங்கிய அன்னை சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் பன்னிரண்டாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனி விசாக நன்னாளான நேற்றுப் புதன்கிழமை(01) கொரோனா நோய் நிலைமையைக் கருத்திற் கொண்டு எளிமையாக இடம்பெற்றது.

காலை- 08 மணியளவில் ஆலயத்தில் விசேட பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-08.30 மணியளவில் சிவத்தமிழ்ச் செல்வி அன்னை நினைவாலயத்தில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணத்துடன் துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்கள், ஆசிரியர்கள், துர்க்காதேவி தேவஸ்தான சிவாச்சாரியார்கள், நிர்வாகத்தினர், பிரமுகர்கள் ஆகியோர் ஆலயத்தை வலம் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை-08.45 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னை சிவத்தமிழ்ச் செல்வி உருவச் சிலையடியில் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள், அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் உள்ளிட்டோர் சிவத்தமிழ்ச் செல்வியின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்களின் சிவத்தமிழ்ச் செல்வியை நினைவு கூர்ந்து பாடல் இசைத்தனர். குறித்த பாடல் மனங்களை உருக்கும் வகையில் அமைந்திருந்தது.

தொடர்ந்து தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள், அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோரின் பிரார்த்தனையுரைகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து தேவஸ்தான திருமுறை மடத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றன.

மேற்படி குருபூசை வைபவத்தில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள், உதவிக் குருமார்களான சிவஸ்ரீ இ. பிரசன்னவதனக் குருக்கள், சு.சுந்தராஜாசர்மா, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்கள், ஆசிரியர்கள், துர்க்காதேவி தேவஸ்தான சிவாச்சாரியார்கள், நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − three =

*