;
Athirady Tamil News

எந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

0

4650அமெரிக்க உளவுத்துறையை ஏமாற்றி அணு ஆயுதம் செய்வது போன்றது, குழந்தைகளை ஏமாற்றி காய்கறிகள் கொடுப்பது. சோற்றுக்குள் மறைத்து, சப்பாத்திக்குள் சுருட்டி ட்ரிக் பண்ணி கொடுக்கும் கொஞ்சம் காய்கறியும் சத்தானதாக இருக்க வேண்டாமா? ‘‘ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு இயல்பு உண்டு…

இந்த சீசனுக்கு இந்தக் காய்கறின்னுகூட வரைமுறை இருக்கு. அதன்படி கொடுத்தா, கொடுக்குற காய் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’’ என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். ‘‘நம்மளை விட இயற்கைக்குதான் நம்ம மேல அக்கறை அதிகம். ஆக, எந்த சீஸனில் நமக்கு என்ன தேவையோ அதுதான் விளையும்!’’ என்கிறவர் ‘எந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்’ என ஒரு கம்ப்ளீட் லிஸ்ட் தருகிறார்…

மார்ச் டூ மே…

காய்கறிகள்: வெயில் சுட்டெரிக்கிற இந்தக் கோடையில பூசணிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் எல்லாம் நிறையக் கிடைக்கும். ‘தண்ணீரைத் தவிர இதுல என்ன இருக்கு’ன்னு சிலர் கேட்கிறாங்க. இன்னும் சிலர், சளி பிடிக்கும்னு பயப்படுறாங்க. இது தப்பான கருத்து. ஒருத்தர் உடல் எடை குறையணும்னு நினைச்சா, இந்தத் தண்ணீர்க் காய்கள்ல கூட்டு செய்து சாப்பிட்டா போதும். டேஸ்ட்டாவும் இருக்கும்… கொழுப்பையும் கரைச்சிடும்.

நீர் அதிகமா இருக்கிறதால வயிறும் வேகமா நிரம்பி, சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி கால்ல நீர் கட்டும். அவங்க சுரைக்காய் சாப்பிடும்போது அந்த நீரை எடுத்துடும். சர்க்கரை மற்றும் இதய நோயாளிங்க, ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவங்க, மூலநோய், குடல்புண் இருக்கிறவங்க புடலங்காய் எடுத்துக்கணும். இந்தக் காய்கள்ல கலோரி சத்து குறைவு. மிதமான புரதச் சத்தும் இருக்கு. பழங்கள்: இந்த சீஸன்ல தர்பூசணி, கிர்ணிப் பழங்களை அதிகம் எடுத்துக்கணும். வெயிலால உடம்பில் குறையிற நீர்ச்சத்தை பேலன்ஸ் பண்ணி குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய பழங்கள் இவை. சிறுநீரகப் பிரச்னையையும் தீர்க்கும்.

ஜூன் டூ ஆகஸ்ட்…

காய்கறிகள்: இந்தக் காலத்துல பீன்ஸ், அவரைக்காய், காராமணி போன்றவை விலை கம்மியா கிடைக்கும். இந்த மூணுலயுமே புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகம். பீன்ஸ்ல வைட்டமின் பி இருக்கு. அதே மாதிரி, அவரைக்காயை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வச்சி சாப்பிடலாம். உடல் வளர்ச்சிக்கு துணை செய்யக் கூடியது. செரிமானப் பிரச்னையைப் போக்கும்.

பழங்கள்: மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு பழங்கள் இந்த சீஸனில் அதிகம் கிடைக்கும். மாம்பழம் உடலுக்கு உஷ்ணம்னு தவிர்க்க வேண்டாம். இது ரத்தத்தை அதிகரிச்சு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்குது. திராட்சை, ஆரஞ்சில் வைட்டமின் ஏ சத்து நிறைஞ்சிருக்கு. நன்றாகப் பசியைக் கொடுக்கக் கூடியது.

அக்டோபர் டூ பிப்ரவரி…

காய்கறிகள்: கேரட், முள்ளங்கி, கோவைக்காய், பட்டாணி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவை இந்தக் காலத்துல மலிவா கிடைக்கும். வெள்ளரிப்பிஞ்சு, இளசான இஞ்சி இதெல்லாம் டிசம்பர் காலங்கள்ல கிடைக்கக் கூடியது. ஏன்னா, குளிர்காலத்துல பல்வேறு தொற்று நோய்கள் வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. அதை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுக்கிற உணவுகள் இதெல்லாம். சர்க்கரை நோய் இருந்தா பூமிக்குக் கீழ் விளைகிற வெஜிடபிள்ஸ் சாப்பிடக் கூடாதுனு சொல்றோம். ஆனா, பூமிக்கு அடியில கேரட் கிடைச்சாலும், அது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இவங்க, தினமும் இதை அளவோடு எடுத்துக்கணும். முட்டைக்கோஸ் மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. முள்ளங்கி ரத்தத்தை சுத்தமாக்கும். சிறுநீர் உபாதைகளைத் தடுக்கும். காலிஃபிளவர், நார்ச்சத்து நிறைஞ்சது.

கேன்சரையே தடுக்கும்!

பழங்கள்: பேரிக்காய், ஆப்பிள், கொய்யாப்பழம் இந்தக் காலத்துல அதிகமா கிடைக்கும். குளிர்காலத்துல கிடைக்கிற ஆப்பிள் ரொம்ப இனிப்பாவும், நல்லதாவும் இருக்கும். ஆப்பிள் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். இதய நோய்க்கும் நல்லது. கொய்யாப்பழம் மலச்சிக்கலை தீர்க்கக் கூடியது. ரத்தசோகை உள்ளவர்கள் கண்டிப்பா சாப்பிட வேண்டிய பழம் இது.

வருடம் முழுவதும் சாப்பிட வேண்டியது…

காய்கறிகள்: வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றுக்கு சீஸன் கிடையாது. எப்போதும் கிடைக்கும். நிறைய நார்ச்சத்து கொண்டவை. இவை மருத்துவ குணம் நிறைந்த காய்கறிகள். அதுபோல, வெண்டைக்காய், பீட்ரூட் எப்போதும் சாப்பிடலாம்.

கிழங்கு வகைகள்:

உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு. இந்த மூன்றையும் மாவுச் சத்துக்காக சாப்பிடணும். சர்க்கரை நோய் இருக்கிறவங்க கிழங்குகள் சாப்பிடும்போது அரிசியை குறைவா எடுத்துக்கிட்டா போதும். இந்த அயிட்டங்களை செய்யும்போது எண்ணெய் குறைவா சேர்க்கணும்.

கீரை வகைகள்:

எல்லாக் காலத்திலும் கீரை சாப்பிடலாம். முளைக்கீரை, முடக்கத்தான், முருங்கை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, மணத்தக்காளின்னு 16 வகை கீரைகள் இருக்கு. நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்துன்னு எல்லாம் கொண்டது கீரை. சிலர் மழை சீஸன்ல கீரை சாப்பிடக் கூடாதுனு சொல்வாங்க. காரணம், வளர்ற இடம் சுத்தமா இருக்காதுங்கிறதுதான். வீட்டுலேயே வளர்த்தா எப்ப வேணாலும் சாப்பிடலாம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*