;
Athirady Tamil News

பேபி கார்ன்!! (மருத்துவம்)

0

சோளம் பிடிக்காதவர்களுக்குக் கூட அதன் மினியேச்சரான பேபி கார்ன் பிடிக்கும். சோள முத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையைக் கொண்டது பேபி கார்ன்.அளவில் சிறிதானாலும் அபரிமிதமான ஆரோக்கியம் நிறைந்தது இது. நாம் வழக்கமாக எடுத்துக் கொள்கிற உணவுகளில் தவறிப் போகிற ஊட்டச்சத்துகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டது பேபி கார்ன்.பேபி கார்னில் என்ன இருக்கிறது, அதை எப்படி சமைப்பது எனத் தெரியாதவர்களுக்கு, பேபி கார்ன் பெருமைகளைப் பட்டியலிடுவதோடு, அதை வைத்து ஆரோக்கியமான மூன்று உணவுகளையும் சமைத்துக் காட்டியிருக்கிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ.

பேபி கார்ன் மிக அதிகளவு வைட்டமின் பி சத்தை கொண்டது. ஃபோலிக் அமிலம், தயாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை நிறைந்தது. செரிமானம் சீராக இருக்க வைட்டமின் பி மிக முக்கியம். இதில் உள்ள ஃபோலேட், மூளையின் செயல்பாட்டுக்கு மிக முக்கியமானது. புதிய செல்கள், குறிப்பாக ரத்த செல்கள் உருவாகவும், நினைவாற்றல் மேம்படவும் உதவுபவை. சாதாரண கார்னை விட, பேபி கார்னில் கிளைசெமிக் இன்டக்ஸ் குறைவு. அதாவது, பேபி கார்ன் மூலம் உடலுக்குச் சேரும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவு.

பேபி கார்னில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அபரிமிதமாக உள்ளன. இந்தச் சத்துகள் எல்லாம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், வயதாவதன் காரணமாக எலும்புகள் முறிந்து போவதையும் தவிர்க்கின்றன. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.

நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது. கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. பேபி கார்னில் உள்ள கரோட்டினாயிட்ஸ், வைட்டமின் சி மற்றும் பயோ ஃப்ளேவனாயிட்ஸ் போன்றவை இதயத்தின் ஆரோக்கியம் காத்து, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கக்கூடியவை.

இரும்புச்சத்துக் குறைபாட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து அனீமியா எனப்படுகிற ரத்தசோகை ஏற்படுவதை பேபி கார்ன் தடுக்கிறது. காரணம், அதிலுள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம். இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படுகிற சிலவகைப் பிரச்னைகளுக்கு கார்ன் ஸ்டார்ச் மருந்தாகவும் பயன்படுகிறது.

கர்ப்பிணிகள் பேபி கார்னை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலோ, கை, கால்களில் வீக்கம் அதிகமிருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அதை எடுத்துக் கொள்வதே பாதுகாப்பானது. கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். பேபி கார்ன் சாப்பிடுவதன் மூலம் அதைத் தவிர்க்கலாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல் – 86 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் – 18.70 கிராம்
புரதம் – 3.27 கிராம்
நார்ச்சத்து – 2 கிராம்
வைட்டமின் ஏ – 187 IU
வைட்டமின் சி – 6.8 மி.கி.
வைட்டமின் இ – 0.07 மி.கி.
சோடியம் – 15 மி.கி.
பொட்டாசியம் – 270 மி.கி.
துத்தநாகம் – 0.46 மி.கி.

எப்படி வாங்குவது?

எப்போதுமே ஃப்ரெஷ் பேபி கார்னாக வாங்குவதுதான் சிறந்தது. டின்களில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட
கார்னில் சோடியம் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். முத்துகள் பிஞ்சாக இருக்க வேண்டும்.

எப்படிப் பாதுகாப்பது?

வாங்கிய உடனேயே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் அதன் இனிப்புச்சுவை குறையாமல் இருக்கும். தோல் நீக்கப்படாத பேபி கார்ன் என்றால் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

எப்படி சமைப்பது?

பேபி கார்னை சாலட்டில் அப்படியே சேர்க்கலாம். அதன் அளவு, இள மஞ்சள் நிறம், ருசி என எல்லாமே சிறப்பாக இருக்கும்.
சமைப்பதற்கு முன், மேல் தோலை நீக்கிவிட்டு, சுத்தமான தண்ணீரில் அலசிவிட்டுப் பயன்படுத்தவும். ஆவியில் வேக வைத்து, தேவையானால் மசாலா தூவி அப்படியே சாப்பிடலாம். மற்ற காய்கறிகளை சமைக்கும்போது, பேபி கார்னையும் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி சூப் செய்கிற போது, பேபி கார்னை அப்படியே பச்சையாக சேர்த்துப் பரிமாறலாம். விருப்பமான மசாலா கலவையில் சிறிது நேரம் ஊற வைத்து, தனியாகவோ, மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ சைட் டிஷ்ஷாக செய்யலாம்.

பேபி கார்ன் மசாலா ஃப்ரை

என்னென்ன தேவை?

பேபி கார்ன் – 50 கிராம், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – சில துளிகள், கார்ன் ஃப்ளார் – அரை டீஸ்பூன், அரிசி மாவு – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பேபி கார்னை மெலிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி-பூண்டு விழுது, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், உப்பு, எலுமிச்சைச்சாறு எல்லாம் சேர்த்துக் கலக்கவும். 10 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பேபி கார்ன் ஸ்டிக்ஸ்

என்னென்ன தேவை?

பேபி கார்ன் – 50 கிராம், குடை மிளகாய் – 50 கிராம், பனீர்- 20 கிராம், காளான் – 30 கிராம், எலுமிச்சைச்சாறு – 3 துளிகள், புதினா – சிறிது, எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பேபி கார்னை வட்ட வில்லைகளாகவும், குைடமிளகாய், பனீர், காளானை சதுரத் துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும். அவற்றை சுத்தமான மரக்குச்சிகளில் ஒன்றன் பின் ஒன்றாகக் குத்தி வைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு அதன் மேல் குச்சிகளைப் பரப்பி வைக்கவும். குச்சிகளைத் திருப்பி, எல்லா பக்கங்களிலும் வேகும்படி செய்யவும். புதினா, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு தூவி, பொன்னிறமானதும் எடுத்து
சூடாகப் பரிமாறவும்.

பேபி கார்ன் சாலட்

என்னென்ன தேவை?

பேபி கார்ன்- 20 கிராம், மஞ்சள் மற்றும் பச்சை குைடமிளகாய் – தலா 20 கிராம், வெங்காயத்தாள் – 10 கிராம், பாதாம் – 10 கிராம், புதினா – சிறிது, உப்பு- தேவைக்கு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – சில துளிகள்.

எப்படிச் செய்வது?

பேபி கார்ன், குடைமிளகாய், வெங்காயத்தாள், புதினா எல்லாவற்றையும் நறுக்கவும். பாதாமை ஸ்லைஸ் செய்யவும். ஒரு அகலமான பாத்திரத்தில் இவை எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*