;
Athirady Tamil News

கொரோனா சுகாதார அறிவுறுத்தல்களை பேணியபடி நல்லூர் கந்தன் உற்சவம்!!

0

இலங்கையின் கந்தகோட்டங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 25.07.2020 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மகோற்சவம் இருபத்தைந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆலய நிர்வாகத்தினரின் திட்டமிடப்பட்ட மகோற்சவ ஒழுங்கமைப்பின்படி பத்தாவது நாளான எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி (திங்கட்கிழமை) மஞ்சத் திருவிழாவும், இருபதாவது நாளான ஓகஸ்ட் 13ஆம் திகதி (வியாழக்கிழமை) கைலாசவாகனத் திருவிழாவும், 23ஆம் நாளான ஓகஸ்ட் 16ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சப்பரத் திருவிழாவும், 24ஆம் நாளான ஓகஸ்ட் 17ஆம் திகதி (திங்கட்கிழமை) தேர்த் திருவிழாவும், மறுநாள் 18ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தத் திருவிழாவும் நடைபெறுகின்றன.

வழமை போன்று இம்முறையும் உற்சவ காலத்தில் ஆலயத்தை சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு, பிரதான போக்குவரத்துக்கான மாற்றுப் பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் ஓகஸ்ட் 20ஆம் திகதி நள்ளிரவு வரை நடைமுறையிலிருக்கும்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழ்நிலையில் இம்முறை நல்லைக் கந்தன் வருடாந்த மகோற்சவத்தின் போது யாழ்.மாநகர சபை ஆலய நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு சுகாதார நடைமுறைகளை செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன்படி உற்சவ காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.

இம்முறை உற்சவ காலத்தின் போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றி, ஆலய சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி வாயிலாக யாழ்.மாநகர சபை அடிக்கடி அறிவித்துவருகிறது. வெளியிடங்களிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் (ஆலயத்தைச் சூழவுள்ள) சகல பிரதான மற்றும் குறுக்கு வீதிகளிலும் யாழ்மாநகர சபையின் தடைமுகாம் மற்றும் விசேட சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அங்கு பொலிசார் கடமையாற்றி வருகிறார்கள். இந்த தடைமுகாம் ஊடாக ஆலயம் வரும் சகல அடியார்களும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமானதாகும். இவர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது வாகன அனுமதிப்பத்திரம் – இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக, சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு அமைய அடியார்கள் அனைவரும் ஆலயத்தில் உள்நுழைவதற்கு முன்னர் கைகளை கழுவி சுத்தம் செய்வதும், ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனியாள் இடைவெளியைப் பின்பற்றி வழிபாடுகளை மேற்கொள்வதும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அடியார்கள் ஆலயத்துக்குள் நீண்ட நேரம் தரித்து நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அடியார்கள் யாராவது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்கு அல்லது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அதற்குரிய காலம் முடிவடைந்த நிலையில், ஆலயத்திற்கு வருகை தரும் பட்சத்தில், தனிமைப்படுத்தல் முடிவடைந்த காலத்தில் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை தம்முடன் கொண்டு வருதல் வேண்டும். முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ சான்றிதழை எப்போதும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதாவது காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் போன்றன காணப்படுபவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை தவிர்ப்பது நல்லது என்றும், அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், ஆட்டக்காவடி மற்றும் தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது ஆலய வளாகத்திலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இம்முறை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆலய சுற்றாடல் வீதிகளில் மண்டகப்படி வைத்தல், பிரசாதம், தாகசாந்தி, அன்னதானம் என்பன வழங்கல் போன்றவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. உற்சவ காலத்தின் போது ஆலய சுற்றாடலில் இடம்பெற்று வரும் தெய்வீக சொற்பொழிவுகள், இசையரங்கு, கலைநிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் இம்முறை இடம்பெற மாட்டாது.

நல்லைக் கந்தன் ஆலயத்தை நோக்கி வரும் சகல பிரதான மற்றும் குறுக்கு வீதிகளிலும் வழமை போல் இவ்வருடமும் தெரு மூடி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் தங்கியிருந்து இளைப்பாறிச் செல்வதற்காகவே இவை அமைக்கப்பட்டிருப்பதாகவும், தாகசாந்தி மற்றும் அன்னதானம் எதுவும் இங்கு வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்.மாநகர சபையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லைக் கந்தன் உற்சவ காலத்தில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்துக் கொள்ளும் வகையிலும், ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் நலனை கவனித்துக் கொள்வதற்காகவும் யாழ்.மாநகரசபை தேவையான ஏற்பாடுகளைச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.கனகசூரியர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*