பீதர் பிரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் கடித்து குதறி பச்சிளம் குழந்தை படுகாயம்..!!

பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி பூஜா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பூஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவ்வாறு பிறந்த ஒரு குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்து விட்டது. மற்றொரு குழந்தையின் உடல் நிலையும் சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பூஜா அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் கழிவறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது குழந்தையை விட்டுவிட்டு வேறு வார்டில் உள்ள கழிவறைக்கு பூஜா சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் வார்டுக்கு திரும்பிய போது குழந்தை அழுது கொண்டே இருந்தது. மேலும் குழந்தையின் கை, காலில் பலத்த காயங்கள் இருந்தது. அதே நேரத்தில் அந்த வார்டில் இருந்து ஏராளமான எலிகள் ஓடின.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பூஜா டாக்டருக்கும், நர்சுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்வையிட்டனர். அப்போது குழந்தையை எலிகள் கடித்திருந்தது தெரியவந்தது. இதற்காக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிம்ஸ் ஆஸ்பத்திரி பழமையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கு எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் நோயாளிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லை என்று பூஜா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை இழந்து விட்டதாகவும், தற்போது மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து கை, காலில் படுகாயம் அடைந்திருப்பதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று அருணும், பூஜாவும் கண்ணீர் மல்க கூறினார்கள். இந்த சம்பவம் பீதரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.