;
Athirady Tamil News

யாழ் மாவட்ட விருப்பு வாக்கில், மோசடி நடந்ததா? (வீடியோ)

0

தமிழ் அரசியலில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விடயமாக இது மாறி விட்டது. விருப்பு வாக்கில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசி வருகிறது. இன்னொரு தரப்பு அதை நிராகரிக்கிறது.

விருப்பு வாக்கில் மோசடி செய்யப்பட்டதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. அந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் தரப்புக்கள் எவற்றிடமும், அதற்கான ஆதாரங்களை வைக்க முடியவில்லை.

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே அந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

கடந்த சில பொதுத்தேர்தல்களில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. அப்போதும் யாரும் வழக்கிற்கு செல்லவில்லை. இப்பொழுதும் யாரும் வழககிற்கு செல்வார்களா என்பதும் தெரியவில்லை.

முன்னைய தேர்தல்களில் யாரும் வழக்கிற்கு செல்லவில்லை என்பதால் அந்த தேர்தல்களில் மோசடி நடக்கவில்லையென்றும் நாம் கூறவில்லை. அப்போது தேர்தல் நடந்தது. ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர். இன்னொரு தரப்பினர் நிராகரித்தனர்.

5 வருடங்களின் பின்னர், அந்த தேர்தலில் மோசடி நடந்ததா இல்லையா என்பதை நம்மால்- 5 வருடங்களின் பின்னர் கூற முடியாது.

இந்த தேர்தலில் மோசடி நடந்ததா என்பதை ஆராய்வதே நமது நோக்கம்.

வாக்கெண்ணப்படுவது எப்படி?

வாக்கெண்ணும் நிலையங்களில் மோசடி நடக்கிறது, பெட்டி மாற்றப்படுகிறது, அங்காலும் இங்காலும் பார்த்து விட்டு, ஒரு கட்டை தூக்கி அந்தப் பெட்டிக்குள் போடுவார்கள், கொழும்பில் வாக்கு மாற்றப்பட்டது என உள்ளூரில் பலர் பேசுவார்கள்.

நமது வீட்டுத்திண்ணைகளாக இப்பொழுது சமூக ஊடகங்கள் மாறிவிட்டதால், சமூக ஊடகங்களிலும் அது போன்ற பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

உண்மையில் அப்படி வாக்கு மாற்றலாமா?

இதற்கு ஒரே வரி பதில்- இல்லையென்பதே.

வாக்கெண்ணப்படும் முறையை சரியாக புரிந்து கொண்டால், தேர்தல் மோசடி தொடர்பான பலவித முறைப்பாடுகள் குறைவடையும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்த வாக்களிப்பு நிலையங்களின் வாக்கெண்ணும் மையமாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருந்தது. அதிகபட்சமான 8 வாக்களிப்பு மையங்களின் வாக்குச்சீட்டை, மத்திய கல்லூரியில் இருந்த ஒரு வாக்கெண்ணும் அறையில் எண்ணினார்கள்.

இப்படி, மத்திய கல்லூரியில் 74 அறைகளில் வாக்கெண்ணப்பட்டது. மக்கள் தொகை கூடிய வாக்கெண்ணும் மையங்களை சேர்ந்த 4-6 பெட்டிகள் ஒரு அறையில் எண்ணப்பட்டன. அதிகபட்ச பெட்டி 8.

கிளிநொச்சியும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை சேர்ந்தது தான். ஆனால் கிளிநொச்சியில் தனியாக வாக்கெண்ணப்பட்டு, அது கொழும்பில் தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு, அந்த எண்ணிக்கை கொழும்பிலிருந்தே யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் கட்சிகள் சார்பில் 3 முகவர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு அறையிலும் 25- 30 உத்தியோகத்தர்கள் கடமையிலிருப்பர்.

முதலில் கட்சிகளின் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக பிரதான கட்சிகளிற்கு ஒவ்வொரு பெட்டிகள் வைக்கப்பட்டு, வாக்கு குறைவாக பெறும் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளிற்காக ஒரு பெட்டி வைக்கப்படும். வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட சின்னத்தின் அடிப்படையில், அந்தந்த பெட்டிகளிற்குள் வாக்குச்சீட்டுக்கள் போடப்படும்.

பகல் 11.30 அளவிலேயே கட்சிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்து விட்டது. மதியம் 12.30 அளவில் விருப்பு வாக்கு எண்ணப்பட ஆரம்பித்தது.

விருப்பு வாக்கு எண்ணப்படும் போது, எந்த கட்சியின் விருப்பு வாக்கு எண்ணப்படுகிறதோ, அந்த கட்சியின் பிரதிநிதிகள் மட்டும்தான் அந்த அறையில் நிற்கலாம்.

முதலில் அழைக்கப்படும் கட்சியின் விருப்பு வாக்கு எண்ணப்பட்டதும், ஆட்சேபணை இல்லையென்றால் அந்த கட்சியின் முகவர்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டு விடுவார்கள். அடுத்த கட்சி அழைக்கப்பட்டு விருப்பு வாக்கு எண்ணப்படும்.

எண்ணப்பட்ட வாக்கில் ஆட்சேபணை இருந்தால் இரண்டு முறை மீள் வாக்கெண்ண முகவர்கள் கோரலாம்.

இப்படி 3 முறை வாக்கெண்ணப்பட்டும் முகவர்களிற்கு சந்தேகம் இருந்தால், 2 முறை எண்ணப்பட்ட போது ஒரே எண்ணிக்கை வந்திருந்தால், அந்த எண்ணிக்கை கணக்கிலெடுக்கப்படும்.

இப்படியாக கட்சிகளின் விருப்பு வாக்குகள் தனித்தனியாக எண்ணப்பட்ட பின்னர், அந்த அறையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து முகவர்களும் அழைக்கப்பட்டு, அந்த அறையின் வாக்கு எண்ணிக்கைகள் குறிப்பிட்ட துண்டு ஒன்றை முகவர்களிடம் வழங்குவார்கள்.

இப்படி யாழ் மத்திய கல்லூரியின் 74 வாக்கெண்ணும் அறைகளிலும் நடந்தது.

அந்த துண்டை முகவர்கள் பத்திரப்படுத்தி கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையின் முடிவும், தெரிவத்தாட்சி அலுவலரிற்கு அறிவிக்கப்படும். 74 அறைகளின் முடிவையும் தெரிவித்தாட்சி அலுவலர் மண்டபத்தில் கூட்டி, மொத்த வாக்கு விபரங்கள் அறிவிக்கப்படும். அதே சமயம், 74 வாக்கெண்ணும் அறைகளின் முடிவும் அந்த மண்டபத்தில் ஒட்டப்படும்.

அந்த 74 வாக்கெண்ணும் அறைகளின் முடிவுகள் ஒட்டப்பட்டதை கட்சிகளின் பிரதிநிதிகள் பார்வையிடுவர். புகைப்படம் எடுப்பர்.

இதுதான் வாக்கெண்ணும் நடைமுறை.

வாக்கெண்ணும் அறையில் மோசடி இடம்பெற வாய்ப்பேயில்லையென்பதை அடித்து சொல்லலாம். ஏனெனில், 25-30 உத்தியோகத்தர்கள் உள்ள அறையில் ஒருவர் அல்லது சிலர் வாக்கு எண்ணிக்கையை மாற்ற முடியாது.

ஏனெனில், அங்கு அனைத்து கட்சி ஆதரவாளர்களும் இருப்பார்கள். தெரிவத்தாட்சி அலுவலர் மண்டபத்தில் வாக்கெண்ணும் அறைகளின் முடிவை கணக்கிடும் இடத்திலும் பல கட்சி ஆதரவாளர்கள் இருப்பார்கள்.

வாக்கெண்ணிக்கையை அவர்கள் வெளியில் யாருக்கும் சொல்ல முடியாது என்ற போதும், இயற்கை உபாதை மற்றும் காரணங்களை கூறி வெளியில் வந்து தமது தரப்பினருக்கு கூறுவார்கள். இதனால் தான் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கையை அறிந்து கொள்வார்கள்.

பல கட்சிகளின் ஆதரவாளர்கள் கூடியிருக்கும் இடத்தில் தனியொருவர் முடிவை மாற்றம் செய்ய முடியாது. அந்த மண்டபத்தின் அனைவரும் ஒத்து, மாற்றம் செய்தார்கள் என்பதற்கு வாய்ப்பில்லை.

விருப்பு வாக்கில் மோசடியே செய்ய முடியாதா?

இப்படியொரு கேள்வியை கேட்டால் பதில் சொல்வது சிரமம். ஆனால், அதை கட்சிகள் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு கட்சியும் வாக்கெண்ணும் அறையில் முகவர்களை நியமிப்பதாக குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது.

வாக்கெண்ணும் அறைகளில் முகவர்களை நியமிப்பதற்கான ஆளணி பெரிய கட்சிகளிடம் மட்டுமே உள்ளது. யாழ்ப்பாணத்தில் அனைத்து வாக்கெண்ணும் அறைகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, சுதந்திரக்கட்சி ஆகிய தரப்புக்களே முகவர்களை நிறுத்தின.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை, அனைத்து அறைகளிலும் தமிழ் அரசு கட்சியின் முகவர்கள் நிறுத்தப்பட்டனர். ஏனைய கட்சிகளின் முகவர்கள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே ஒதுக்கப்பட்டது.

அந்த வாக்கெண்ணும் அறையில் முகவர்களாக நியமிக்கப்படுபவர்கள் அனேகர் புதியவர்கள். நாட் சம்பளத்திற்கு செல்பவர்களும் உள்ளனர்.

வாக்கெண்ணப்பட்ட பின்னர் வழங்கப்படும் துண்டுகளை கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் சொல்லி அனுப்புவார்கள்.

ஆனால் கணிசமானவர்கள் அதை பெறுவதில் அலட்சியமாகி விடுவார்கள். தமது வாக்கு எண்ணிக்கை தெரிந்து, அதை இணைப்பாளரிற்கு அறிவித்தாலே போதுமானது என அலட்சியமாக விட்டு விடுவார்கள்.

யாழ் மத்திய கல்லூரியின் அனேகமான வாக்கெண்ணும் அறைகளில் முகவர்களை நியமித்திருந்த போதும், அதில் கால்வாசிக்கும் குறைந்தளவான துண்டுகளையே முகர்வகளிடமிருந்த பெற முடிந்தது என ரெலோ பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் அறைகளில் வழங்கப்பட்ட துண்டுகளை அனேகமான கட்சிகள் பெறுவதில்லை. அப்படி பெறாத பட்சத்தில் அந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியாது. சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

அதேபோல தெரிவத்தாட்சி அலுவலர் மண்டபத்தில் ஒட்டப்படும், வாக்கெண்ணும் அறைகளின் முடிவையாவது புகைப்படம் எடுத்து வைத்திருந்தால் தேர்தல் தொடர்பான சந்தேகத்தை தீர்க்க முடியும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

கிளிநொச்சி வாக்கில் முறைகேடு நடந்ததா?

இம்முறை யாழ்ப்பாண தேர்தல் முடிவு சர்ச்சையில் கிளிநொச்சி வாக்கு மையங்களே சர்ச்சையை தோற்றுவித்தது. குறிப்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களில் பேட்டியளித்த போது, கிளிநொச்சி வாக்குகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாமென தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்ட போது, அங்குள்ள தெரிவத்தாட்சி அலுவலர் வாக்கெண்ணும் அறைகளின் முடிவை பகிரங்கமாக ஒட்டியிருந்தார்.

சிக்கலை தீர்க்க ஒரே வழி

கிளிநொச்சி வாக்கெண்ணும் அறை முகவர்களை சிறிதரன் நியமித்திருந்தார். மத்திய கல்லூரி வாக்கெண்ணும் அறை முகவர்களை, பங்காளி கட்சிகளிடமிருந்தும் பெற்று தமிழ் அரசு கட்சியே நியமித்தது.

அனைத்து வாக்கெண்ணும் அறைகளின் இறுதி முடிவும் தமிழ் அரசு கட்சியிடமே இருக்கும். பங்காளிக்கட்சிகள் யாருக்கும் “ஏதாவது நேர்ந்தால்“ அவர்களால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாது. அதற்கு தமிழ் அரசு கட்சியின் தலைமையின் ஆதரவு அவசியம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முகவர்களை நியமித்தவர் சிறிதரன். கிளிநொச்சி சர்ச்சை தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டுமெனில், சிறிதரன் வெளிப்படையாக நடந்து, அந்த வாக்கு எண்ணிக்கை விபரங்களை வெளியிட வேண்டும்.

கிளிநொச்சி வாக்கு விபரங்கள் சிறிதரன் தரப்பை விட, தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேறு யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை.

ஒரு கட்சியின் கட்டமைப்பே வாக்கு மோசடியில் சம்பந்தப்பட்டது என நம்புவது சிரமம். ஆனால் அதிலும் எக்ஸ்குளூசிவ்வாக தமிழ் பக்கம் ஒரு தகவல் அறிந்தது.

நேற்று (7) இரவு வரை, யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட துண்டுச்சீட்டுக்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரிடம் கிடைக்கவில்லை!

மாவை சேனாதிராசாவின் முன்னாள் ஆதரவாளரும், தற்போது சுமந்திரன் அணியில் இணைந்து கொண்டவருமான வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் அந்த துண்டுச் சீட்டுக்களை வாக்கெண்ணும் மையங்களில், முகவர்களிடம் சேகரித்தார். பங்காளிக் கட்சிகளிடம் அதுவும் ஒரு அதிருப்தியாக உள்ளது.

தாம் நியமித்த முகவர்களிடமும் சுகிர்தன் துண்டுச்சீட்டை பெற்று விட்டார், தெரியாத்தனமாக முகவர்கள் அதை ஒப்படைத்து விட்டனர் என பங்காளிக்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டது.

அந்தச்சீட்டுக்களை அவர் கட்சியிடம் ஒப்படைத்து, அதை வெளிப்படைத் தன்மையாக்கினால், சர்ச்சை தீர்ந்து விடும்.

ஏன் தாமதம்?

ஆட்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களில் முடிவுகள் நேரகாலத்துடன் வந்து விட்டது, ஆட்கள் தொகை குறைந்த மாவட்டங்களில் முடிவு தாமதமானது என ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஆட்கள் தொகை கூடிய மாவட்டங்களில் எத்தனை வாக்கெண்ணும் அறைகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது.

அதேபோல, நேரம் செல்லச்செல்ல வாக்கெண்ணுபவர்கள் மத்தியில் ஏற்படும் சோர்வு காரணமாக எண்ணிக்கை தவறு ஏற்பட்டு, மீண்டும் மீண்டும் எண்ணப்படுவது வழக்கம்.

இப்படியான விஞ்ஞானபூர்வ காரணங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். எனினும், யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலரே அதை விளக்க வேண்டும்.

அந்த தாமதமே கட்சிகளிற்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகவே, அனைத்து தேர்தல்களிலும் இப்படியான சந்தேகங்கள் எழுவது வழக்கம். அனைத்து முடிவுகளும் வருவதற்கு முன்னர் சில வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக நினைப்பதும், முடிவுகள் மாறுவதும் வழக்கம்.

இம்முறை தேர்தலில் கூட, கிளிநொச்சி முடிவுகள் வருவதற்கு முன்னதாக, வாக்கெண்ணும் அறை முகவர்களின் தகவலின் அடிப்படையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தரப்பில் க.அருந்தவபாலன் தான் முன்னிலையில் இருப்பதாக, அந்தக் கட்சிக்குள் தகவல் பரவியது.

வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்த பிரமுகர்கள் பலர் அருந்தவபாலனிற்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். எனினும், கிளிநொச்சி முடிவுகள் வந்ததும், நிலைமை மாற்றமடைந்து விக்னேஸ்வரன் முன்னிலைக்கு வந்தார்.

கடந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த முறைப்பாட்டையடுத்து, இம்முறை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளே கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு நின்றார்கள். வாக்கெண்ணும் அறைகளிற்குள்ளும் அவர்களிற்கு தகவல் வழங்க ஆட்களிருந்தனர்.

ரட்ணஜீவன் கூலின் வேண்டுகோளை நிராகரித்த தெரிவித்தாட்சி அலுவலர்

வாக்கெண்ணும் இரவில் தெரிவத்தாட்சி அலுவலரை சந்தித்ததாகவும், தாமதம் குறித்து வினவியபோது ஒரு மணித்தியாலத்தில் அறிவிப்பதாக கூறிய போதும், அவர் தாமதப்படுத்தியதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வாக்கெண்ணும் தாமததத்தையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரிற்கு சிவாஜிலிங்கம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முயன்றார். எனினும், அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

இதையடுத்து, ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூழை அழைத்ததாகவும், அவரிடம் நிலைமை குறித்து தெரியப்படுத்தியதையடுத்து, யாழ்ப்பாண தெரிவித்தாட்சி அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், எனினும், யாழ் தெரிவித்தாட்சி அலுவலரிடமிருந்து பதில் கிடைக்காததையடுத்து, தனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, யாழ் தெரிவத்தாட்சி அலுவலரிடம் பேசியதாகவும், அதன்போது- விருப்பு வாக்கு விபரத்தை வெளியிடுவதை 24 மணித்தியாலம் தாமதப்படுத்தும்படி கூழ் கோரியதாகவும், அதை யாழ் தெரிவித்தாட்சி அலுவலர் நிராகரித்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைகளிற்குள் நாம் புக விரும்பவில்லை.

விஞ்ஞானபூர்வமாக கட்சிகள் செயற்பட்டால், விருப்பு வாக்கு மோசடி நடந்ததை உறுதி செய்யலாம். அதற்கான பொறிமுறை கட்சிகளிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தாமல், ஒவ்வொரு தேர்தலிலும் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டுவது முறையல்ல.

அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய கட்டமைப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அதை நிரூபிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழ் அரசு கட்சியில் பல அணிகள் இருந்து, ஒவ்வொரு அணியும் தனித்தனியாக முகவர்களை நியமித்து, குறுநில மன்னர்களாக செயற்பட்டால் அதை நிரூபிக்க முடியாது.

கட்சியின் பொதுகட்டமைப்பின் ஊடாக முகவர்கள் நியமிக்கப்பட்டால், இந்த குற்றச்சாட்டுக்கள் எழாது.

மாவை குறூப் அங்கு நின்றார்கள், சுமந்திரன் குறூப் இங்கு நின்றார்கள், சிறிதரன் குறூப் கிளிநொச்சியில் நின்றது என்று கூறி, இன்னொருவர் சந்தேகமடைவது கூட்டமைப்பின் “குறூப்“ அரசியலாலேயே. அந்த குறூப் அரசியலை கைவிட்டாலே, இந்த குற்றச்சாட்டு எழாது.

Gepostet von Darshini Rajh am Donnerstag, 6. August 2020

Gepostet von Santhulaki Eelapriyan am Donnerstag, 6. August 2020

Gepostet von Santhulaki Eelapriyan am Donnerstag, 6. August 2020

வாக்கு எ்ணிக்கை மோசடி2ம்,4ம்,3ம், 7ம்,ஐயோ.ஐயோ..தமிழனுக்கு 1234எண்ண தெரியாது!!சுமந்திரனே ஓட்டுவந்துஓட்டு எண்ணி காட்டிவிட்டு stf பாதுகாப்போடு வூட்டுக்கு போயிட்டாரப்பா.நம்ம லோக்கையாமத்தையா..

Gepostet von Kumar Thillainathan am Donnerstag, 6. August 2020

Gepostet von Darshini Rajh am Donnerstag, 6. August 2020

Results

Gepostet von Poovan Media am Donnerstag, 6. August 2020

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*