போலி கையெழுத்து மூலம் முதல்மந்திரி நிவாரண நிதி கணக்கில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சுருட்டல் – 5 பேர் கைது – திடுக்கிடும் தகவல்..!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில முதல்மந்திரிகளின் சார்பில் தனியாக வங்கிக்கணக்கு உள்ளது. பேரிடர் போன்ற சமயங்களில் விருப்பத்தின் பெயரில் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதி உதவிகளை நன்கொடையாக மாநில அரசுக்கு வழங்க இந்த வங்கி கணக்குகள் பயன்படுகின்றன. இவை முதல்மந்திரி நிவாரண நிதி கணக்கு என அறியப்படுகிறது.
இந்த வங்கி கணக்கில் எப்போதும் ஏராளமான பணம் இருப்பில் இருக்கும். இந்த வங்கி கணக்கிற்கு யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் ஆனால் இந்த கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமென்றால் முதல்மந்திரியின் கையெழுத்து அவசியம்.
இந்நிலையில், முதல்மந்திரியின் நிவாரண நிதி வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 5 பேரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநில முதல்மந்திரி சோனாவாலின் நிவாரண நிதி வங்கி கணக்கில் இருந்து கடந்த 10 ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்மந்திரியின் சிறப்பு விசாரணை பிரிவில் இருந்து காவல்துறை எஸ்.பி.க்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரையடுத்து விசாரணை மேற்கொண்ட அசாம் போலீசார் உத்தரபிரதேச மாநில கோரக்பூர் பகுதியில் வசித்து வந்த சர்வேஷ் ராவ், ரவீந்திர குமார், முகமது ஆரிப், முகமது ஆசிப், சல்ஜி ஆகிய 5 பேரை கைது
செய்தனர்.
கோப்பு படம்
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காசோசலையில் அசாம் முதல்மந்திரியின் கையெழுத்தை போலியாக இட்டு முதல்மந்திரியின் நிவாரண நிதி கணக்கில் இருந்து 3 லட்சத்து 30 ஆயிரம் வரை பணத்தை எடுத்துள்ளதை ஒப்புக்கொண்டனர்.
மேலும், பல்வேறு மாநில முதல்மந்திரிகளின் நிவாரண நிதிக்கணக்குகளில் இருந்து பல முறை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுள்ளதாகவும் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் அடுத்தகட்ட விசாரணைக்காக அசாம் மாநிலத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
முதல்மந்திரிகளின் நிவாரண நிதியில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.