அபுதாபி வணிக வளாகத்தில், ‘ரோபோ’ காவலாளி அறிமுகம்..!!!

அமீரகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் புதுமையாக அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ரோபோ’ காவலாளி.
பொதுவாக வணிக வளாகங்களில் ‘செக்கியூரிட்டி கார்டு’ எனப்படும் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் இதர பணிகளை செய்து வருகின்றனர். அந்த பணிகள் அனைத்தையும் செய்யும் வகையில் தற்போது ‘ரோபோ’ காவலாளி பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக 4 சக்கரங்களுடன் வணிக வளாகத்தை சுற்றி வரும் இந்த ‘ரோபோ’ காவலாளி பொதுமக்கள் நடமாட்டத்தை மிக நுட்பமாக கண்காணிக்கிறது. இதற்காக இதன் முகபகுதியில் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடுகிறது.
யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் கண்டுபிடித்து விடுகிறது. யாராவது வழியை தவறவிட்டால் அந்த ‘ரோபோ’ முன் நின்று பேசினால் போதும் சரியான இடத்தை கூறி அனுப்பி வைக்கிறது.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கண்காணித்து கட்டுப்படுத்துகிறது. குறுக்கே யாராவது வந்தால் அல்லது தடைகள் இருந்தால் அவற்றை உணர்ந்து நகர்ந்து செல்லும் வகையில் உணரும் கருவிகள் இந்த ‘ரோபோ’வில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக சந்தேகத்துக்கிடமான வகையில் கீழே பைகள், புகை, நெருப்பு, பள்ளம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கிறது. யாஸ் மால் வணிக வளாகத்தில் தற்போது இந்த ‘ரோபோ’ காவலாளியை காண பலர் சென்று வருகின்றனர்.