கொரோனாவுக்கு தீர்வு காண இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் கொண்ட 11 குழு தயார்..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் போராடி வருகின்றனர். வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அவ்வகையில், கொரோனா வைரசை விரைவாக கட்டுப்படுத்தி தீர்வுகள் காண்பதற்காக இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய 11 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுவினர் விரைவில் இணைந்து பணிகளை தொடங்க உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கொண்ட 11 குழுக்கள் இணைந்து விரைவில் கொரோனா தடுப்பு பணிகளை தொடங்க உள்ளன. ஆரம்பகால நோயறிதல் சோதனைகள், வைரஸ் தடுப்பு சிகிச்சை, மருந்து மறுபயன்பாடு, வென்டிலேட்டர் ஆராய்ச்சி, கிருமிநாசினி இயந்திரங்கள் மற்றும் கொரோனாவுக்கான சென்சார் அடிப்படையிலான அறிகுறியை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அமெரிக்க-இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப எண்டோவ்மென்ட் ஃபண்ட் (யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப்) கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட மானியங்களின் கீழ் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன’ என கூறப்பட்டுள்ளது.
கொரோனா சவாலை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான யோசனைகளை முன்வைக்கும் 11 இருதரப்பு குழுக்களுக்கு யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப் விருதுகளை அறிவித்திருப்பதாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கூறி உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வழிவகுக்கும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அமெரிக்காவின் வெறியுறவுத்துறை இணைந்து யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.