தாய்லாந்தில் 100 நாட்களுக்கு பின் முதல் கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. எனினும், தென்கொரியா, நியூசிலாந்து, வியட்னாம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக காணப்படுகின்றன. நீண்ட நாட்களாக தொற்றில் இருந்து விடுபட்டு உள்ளன.
இந்த வகையில் தாய்லாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக கொரோனா பாதிப்புகள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில், போதை பொருள் குற்றத்திற்காக கடந்த ஆகஸ்டு 26ந்தேதி கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் அந்நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு பரிசோதனை செய்வதற்கு முன் 30 பேருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால், அவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவர்கள் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என உறுதியானது.
இதுபற்றி அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு துறை இயக்குனர் ஜெனரல் சுவான்சை வட்டனாயிங்சரோயென்சை கூறும்பொழுது, எங்கள் நாட்டில் 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உள்ளூர் தொற்றால் பாதிப்பு தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.