20 ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் சஜித் அணி; கிரியெல்ல அறிவிப்பு!!

20 ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட போது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒவ்வொரு சரத்திற்கும் திருத்தங்களை முன்வைத்தார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அதே செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இன்று 20 ஆம் திருத்த சட்டத்திற்கு சென்று சகல அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்துள்ளனர். உயர்நீதிமன்றத்திற்கான நியமனம், காவல்துறை, முப்படைகளுக்கான உயர் பதவி நியமனம், கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கான நியமினம் என்பவற்றை ஜனாதிபதியின் தனி தீர்மானங்களுக்கு அமைய மேற்கொள்ள முடியும்.
20 ஆம் சீர் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.