;
Athirady Tamil News

22 மொழிகளில் இஐஏ வரைவு அறிக்கை -டெல்லி ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்தது மத்திய அரசு..!!

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-இல் (EIA-2020) இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோங்கட் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. முதலில் டெல்லி ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும்படி கூறியது.

இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும்படி உத்தரவிட்ட முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், ஏற்கனவே வழக்கு தொடர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வரும் 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதேபோல் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − fourteen =

*