சொந்த வீட்டை கல்வீசி உடைத்த காங்கிரஸ் நிர்வாகி மகன் கைது..!!

திருவனந்தபுரம் வெஞ்ஞாறுமூட்டில் கடந்த மாதம் 30-ந் தேதி மார்க்சிஸ்டு கட்சியின் தொண்டர்கள் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெஞ்ஞாறுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 8 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் கேரளாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் அலுவலகங்களும் தாக்கப்பட்டன. காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு மீதும் கல்வீசப்பட்டது.
இதில், திருவனந்தபுரம், முட்டத்தரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகி லீணா என்பவரின் வீடும் உடைக்கப்பட்டது.
இந்த தகவல் பரவியதும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி ஆகியோர் லீணா வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் கூறும்போது, காங்கிரஸ் நிர்வாகியின் வீடு தாக்கப்பட்டதற்கு அப்பகுதி மார்க்சிஸ்டு கட்சியினரே காரணம் என்றனர்.
காங்கிரஸ் நிர்வாகி லீணாவும் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். அரசியல் முன்விரோதம் காரணமாக மார்க்சிஸ்டு கட்சியினர் வீடு மீது கல்வீசி தாக்கியதாக கூறியிருந்தார்.
இப்புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காங்கிரஸ் நிர்வாகி லீணாவின் மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்துபோலீசார் லீணாவின் மகன் நிகில் கிருஷ்ணா (வயது 21) என்பவரையும் அவரது நண்பர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மார்க்சிஸ்டு கட்சியினர் மீது புகார் கூற சொந்த வீடு மீது நிகில் கிருஷ்ணாவே கல் வீசி தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்தனர்.
இது பற்றி திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம்குமார் உபாத்யா கூறும்போது, கட்சிக்குள் அரசியல் லாபம் பெற புகார்தாரரின் மகனே சொந்த வீட்டை கல்வீசி தாக்கியுள்ளார். அவரையும், அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.