;
Athirady Tamil News

கட்சி நிர்வாகிகள் மாற்றம்- காங்கிரசில் ராகுல் கை ஓங்குகிறது..!!

0

காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்சியின் உயர்மட்ட அமைப்பான காரிய கமிட்டியில் தொடங்கி அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து சமீபத்தில் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். இது, கட்சியில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு கடிதம் எழுதிய பல தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அல்லது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் முன்னணி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அவர், அரியானா மாநிலத்தில் மேலிட பொறுப்பாளராக இருந்தார். அந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. விரைவில் குலாம் நபி ஆசாத்தின் மேல்-சபை எம்.பி. பதவிக்காலம் முடி வடைகிறது.

அதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேல்-சபை காங்கிரஸ் தலைவர் பதவி மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஆதிர்ரஞ்சன் சவுத்ரி காரிய கமிட்டியில் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார். அவர் இப்போது சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அவரது தகுதி குறைக்கப்பட்டு இருக்கிறது.

கடிதம் எழுதியவர்களில் ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் ஆகியோர் மீண்டும் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, ஜிதின் பிரசாத்துக்கு மேற்கு வங்காள மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதியவர்களில் சசிதரூருக்கு முக்கிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

ராகுல்காந்தியின் ஆதரவாளர்கள் பலருக்கும் உயர்ந்த பதவிகளை வழங்கி இருக்கிறார்கள்.

அவருடைய முக்கிய ஆதரவாளர்களான வேணுகோபால், சக்திசிங் கோகில், ரன்தீப்சிங் சூரஜ்வாலா, ஜிதேந்திரசிங், அஜய்மக்கான், ராஜீவ் சாதவ், மாணிக்கம் தாகூர், ஆர்.பி.என்.சிங், கிருஷ்ணா பைரே, ஜோதிமணி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நல்ல பதவிகளை பெற்று இருக்கிறார்கள்.

இதன்படி ஆர்.பி.என்.சிங், சக்திசிங் கோகில், மாணிக்கம் தாகூர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.பி.என். சிங்குக்கு காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கே.ஜி. வேணுகோபால், அஜய் மக்கான், ஜிதேந் திரசிங், ரன்தீப்சிங் சூரஜ்வாலா ஆகியோர் காரிய கமிட்டி உறுப்பினராக நிய மிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ரன்தீப்சிங் சூரஜ் வாலாவுக்கு சோனியா காந்தியின் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்சங்கர் சாதவுக்கு காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மதுசூதன் மிஸ்திரி தலைவராகவும், ராஜேஸ் மிஸ்ரா, கிருஷ்ண பைரே, ஜோதிமணி, அரவிந்த்சிங் லவ்லி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மதுசூதன் மிஸ்திரி, ஜோதிமணி, கிருஷ்ணா பைரே 3 பேருமே ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள்.

தேர்தல் ஆணையத்தில் ராகுலின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டு இருப்பதால் ராகுல் விரைவில் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என நம்பகமாக எதிர் பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

மேலும் ராகுல்காந்தி பாராளுமன்ற தலைவர் பதவியையும் ஏற்க உள்ளதாக தெரிகிறது.

தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்று கொடுத்திருப்பதன் மூலம் கட்சியில் ராகுல் காந்தியின் கை ஓங்கி இருக்கிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுவரை காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளராக இருந்த ப.சிதம்பரம் தற்போது முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் காரிய கமிட்டியில் அவருக்கு 16-வது இடமே வழங்கப்பட்டுள்ளது. பிரியங்காவுக்கு 15-வது இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தை ப.சிதம்பரத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.

ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். அவருக்கு 16-வது இடம் அளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 4 =

*