;
Athirady Tamil News

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான விரலி மஞ்சளுடன் மூவர் கைது!! (படங்கள்)

0

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து 500 கிலோ விரலி மஞ்சள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளைப் பகுதிக்கு விரலி மஞ்சள் கடத்தி வருவதாக தமிழக மண்டபம் கடலோர காவல் குழு காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வேதாளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வாகனத்தையும் அதிலிருந்த மஞ்சளையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன் வாகனத்தில் இருந்த மூன்று பேரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வேதாளை பகுதியைச் சேர்ந்த சகிபுல்லா, ரியாஸ் ஆகியோர் சகோதரர்கள் என்றும் மேலும் சத்தியமங்கலம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோக வெங்கடேஷ் என்பவர் வாகன ஓட்டி என்பதும் தெரிய வந்தவுடன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ மஞ்சளின் விலை சுமார் 2000 முதல் 2800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மஞ்சள் கடல் வழியாக கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், மன்னார் பகுதியில் சுமார் 2000 கிலோ மஞ்சளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 13 =

*