பதற்றமான சூழ்நிலை: லடாக்கின் நீண்ட கால குளிரை சமாளிக்க தயாராகியுள்ள இந்திய ராணுவ வீரர்கள்..!!!

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையிலான எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறுவது வழக்கம். அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சீன வீரர்கள் அவர்களுடைய பழைய இடத்திற்கு சென்று விடுவார்கள். கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அப்படி அத்துமீறிய சீன ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்தினர் இந்திய வீரர்கள்.
அப்போது இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதன்பின் துப்பாக்கி அல்லாத பயங்கர ஆயுதங்களால் மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அதன்பின் இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
லடாக் பகுதியில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகிறது. வரும் மாதங்களில் இது அதிகமாகும். வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுவிடும். பொதுவாக குளிர் அதிகமாக இருக்கும்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பாக தங்களது இடத்திற்கு பின் வாங்கி விடுவார்கள். குளிர் காலம் முடிந்த பிறகு மீண்டும் எல்லையில் நிறுத்தப்படுவார்கள்.
தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் பின் வாங்குவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குளிரை சமாளிக்கும் வகையில் தயார் படுத்தப்பட்டுள்ளனர். குளிரை தாங்கிக் கொள்ளும் அளவிற்கான சூடுபடுத்துவதற்கான பொருட்கள், குளிரை தாங்கக்கூடிய உடைகள், எரிபொருள், உணவு பொருட்கள், முகாம் போன்றவைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து Fire and Fury Corps தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் கூறுகையல் ‘‘குளிர் காலத்தில் சமாளிக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கைவசம் போதுமான அளவில் உள்ளது. பொருட்கள் எங்கெல்லாம் தேவையோ அங்கு சென்று வழங்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.