;
Athirady Tamil News

ஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான்: அரியநேத்திரன்!!

0

ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஒரு நாடு ஒருசட்டம் என கூறுகின்றார் அப்படியானால் அவருக்கு முன் பதவியல் இருந்த ஜனாதிபதிகள் இரண்டு சட்டம் ஒருநாடு என்ற விதமாகவா செயல்பட்டனர் ஏனெனில் கடந்த காலங்களில் தியாகி திலீபனின் நினைவு இந்த நாட்டில் பல இடங்களில் சுதந்திரமாக இடம்பெற்றபோது ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தியாகி திலீபனின் 33, வது ஆண்டு நினைவு தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்,

கடந்த ஜனாதிபதிகளாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில் பல நினைவுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் தியாகி திலீபனின் நினைவு வணக்கங்கள் வடக்கு கிழக்கு எங்கும் நாம் சுதந்திரமாக நினைவு கூர்ந்தோம் எந்த தடைகளும் இருக்கவில்லை. தற்போது புதிய அரசு ஆட்சிபீடம் ஏறிய பின்பு திடீரென இவ்வாறான தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது இலங்கையில் ஆட்சியாளர்களின் போக்குகளை கொண்டு சட்டதிட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

தற்போது வடக்கு கிழக்கில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் ஏழு கட்சிகள் இணைந்து மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தியாகி திலீபனின் நினைவுகளை நடத்துவதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம், அனுமதி வழங்குங்கள் என்ற அடிப்படையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்திற்கு சாதகமான பதிலை ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த அமைச்சர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஷ் தேவானந்தா, உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யும் விதமாக தியாகி திலீபனின் உண்ணாவிரதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டமையானது கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

ஒரு தமிழ் அமைச்சராக அதுவும் தியாகி திலீபன் பிறந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த டக்ளஷ் தேவானந்தா இவ்வாறு தியாகி திலீபன் தொடர்பாக மிகவும் இம்சிக்கும் வகையில் கருத்துக் கூறி இருப்பது ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தி ஆதாயம் தேடும் ஒரு கூற்றாகவே இதை நோக்க முடிகிறது.

தமிழனே தமிழனுக்கு எப்போதும் எதிரியும் துரோகியும் என்பதற்கு இது நல்ல உதாரணம் என்பது மீண்டும் இது நிரூபணமாகியுள்ளது. நாம் எதிர்பார்த்தோம் உண்மையில் தமிழ் அமைச்சரான டக்லஷ் ஏதோ ஜனாதிபதியுடன் கதைத்து தியாகி திலீபனின் நினைவு வணக்கத்தை நடத்த அனுமதி பெற்றுத்தருவார் என எண்ணினோம். ஆனால் அவர் யார் என்பது மீண்டும் அவரே நிரூபித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் பல இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்த எமது மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவங்களை செய்து தமிழ்மக்களின் மனதை புண்படுத்தி நீங்கள் ஆதாயம் தேடவேண்டாம்.

கடந்த 33, வருடங்களுக்கு முன்பு 23, வயது இளைஞராக இருந்த திலீபன் வெறுமனமே அவரின் சுயநலத்திற்காக தன்னை வருத்தி 12, நாட்கள் நீர் கூட அருந்தாமல் தன் உயிரை இந்த மண்ணில் ஆகுதியாக்கினார் என்ற உண்மை தியாகத்தை தயவுசெய்து யாரும் இப்போது சலுகைக்காக கொச்சப்படுத்த வேண்டாம். தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது என்ற எனது சிந்தனையினை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன் எனவும் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*