;
Athirady Tamil News

உடல் பருமனை குறைக்கும் நத்தைசூரி!! (மருத்துவம்)

0

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மூலிகை மற்றும் அதன் பயன்களை அறிந்து பயன்பெற்று வருகிறோம். அந்த வரிசையில் இன்று நாம், நத்தைசூரி மருத்துவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இருக்கிறோம். நத்தைசூரி என்ற இந்த தாவரத்தை குழி மீட்பான் என்றும் அழைப்பதுண்டு. இது சாலை ஓரங்களில், குன்றுகளில் என எளிதில் கிடைக்கக்கூடியது.

இதைக்கொண்டு உள் மற்றும் வெளிப்பயன்பாடுகளுக்காக பல்வேறு மருந்துகள் தயாரிக்கலாம். இதில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துகள் ஏராளமாக உள்ளது. மேலும் அர்சோலிக் அமிலம் என்ற வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இந்த அமிலம் உடலில் உள்ள பித்தப்பை கற்களையும், சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது.

முதலில் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் கரைய, சிறுநீர் சுருக்கம் மற்றும் ஹை கொலஸ்ட்ரால் கரைய நத்தை சூரி தேனீர் மருத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள்: நத்தை சூரி சமூலம் (இந்த தாவரத்தின் இலை, தண்டு, பூக்கள், விதை என அனைத்து பாகங்களையும் பயன்படுத்துவதற்கு சமூலம் என்று பெயர்), பனங்கற்கண்டு, தனியா, சிறிது நீர். செய்முறை: நத்தை சூரி சமூலத்தை சுத்தம் செய்து கழுவி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்கும் போது அதில் சமூலத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு, தனியா தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி ஆற வைக்கவும். இதனை வடிகட்டி தொடர்ந்து காலை மாலை என குடித்து வர கற்கள் கரையும். கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும். தசை வலி நீங்கும். உடல் புத்துணர்ச்சி அடையும்.

அடுத்து பல்வலியை போக்கும் நத்தை சூரி மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நத்தை சூரி சமூலம், லவங்கம், பூண்டு பற்கள், சமையல் உப்பு, தேவையான அளவு தண்ணீர். செய்முறை: முதலில் பூண்டு 4 அல்லது 5 பற்கள் மற்றும் லவங்கத்தை ஒன்றாக போட்டு நன்கு நசுக்கி எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்.

பின்னர் அதில் நசுக்கி வைத்துள்ள பூண்டு, லவங்க கலவையை போட்டு அதனுடன் நத்தைசூரி சமூலம், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி ஆறவைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த தேனீரை காலை மாலை என வாயில் ஊற்றி கொப்பளித்து வர பல்வலி மட்டுமின்றி பல்சொத்தை, ஈறுவலி, வீக்கம், தொண்டைவலி குணமாகும். இதனை உள்ளுக்கு குடித்துவர பல் ஆரோக்கியம் பெறுவதுடன் பலப்படும்.

நத்தை சூரியை பயன்படுத்தி வலி, வீக்கம் மற்றும் கட்டிகளுக்கு மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சமூலப்பசை, விளக்கெண்ணை. செய்முறை: ஒரு கடாயில் சிறிது விளக்கெண்ணை ஊற்றவும். அதில் கழுவி சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துள்ள சமூலப்பசை சிறிது போட்டு நன்றாக கிளறவும். சுருண்டு வரும் பதத்தில் இறக்கி ஆறவைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். இதனை கட்டி, வீக்கம் உள்ள இடங்களில் தொடர்ந்து மேல்பூச்சாக தடவி வரலாம். நாட்பட்ட கட்டி உள்ள இடத்தில் இந்த பசையை வைத்து கட்டி வர கட்டி உடைந்து குணம் தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 6 =

*